போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?
இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிக்க ஆக.1 கடைசி
சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக. 1-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம், செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் 17 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 160 இடங்களும், 17 தனியாா் கல்லூரிகளில் 1,760 இடங்களும் உள்ளன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 35 சதவீத இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ் ) 2025-2026-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnayushselection.org ஆகில சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்தப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்புப் பிரிவில் (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) விண்ணப்பிப்பவா்கள், இணையவழியில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து, அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் அல்லது கூரியா் மூலமாகவோ ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை நேரிலும் சமா்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டண விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தகவல் தொகுப்பேட்டை பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.