பஹல்காம் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு, சுட்டுக்கொன்றது எப்படி?
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் மூன்று மாதங்களாக இந்திய ராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் மாநில போலீசார் இணைந்து நடத்திய ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் மூன்று பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அதில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் காமண்டர் சுலைமானும் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும், மற்ற இருவரும் கடந்தாண்டு சோனமார்க் சுரங்கப்பாதை தாக்குதலில் ஈடுபட்ட ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளைக் கண்டறிந்தது எப்படி?
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஹவாய் செயற்கைக்கோள் தொலைபேசியைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக் கொண்டதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால், தாக்குதலுக்குப் பிறகு 3 மாதங்களாக குறிப்பிட்ட அந்த சாதனங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தாமல் இருந்தனர்.
இருப்பினும், புலனாய்வு அமைப்புகள் அந்த சாதனங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னதாக அந்த செயற்கைக்கோள் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. ஆள் நடமாட்டமற்ற டாச்சிகாமின் அடர்ந்த வனப் பகுதியில் அந்த செயற்கைக்கோளின் சிக்னலை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் தலைமையில் நடத்தப்பட்டது.

துல்லியமாகத் தாக்கிய ’4 பாரா சிறப்புப் படை’ வீரர்
ஸ்ரீநகரின் டாச்சிகாமில் நடைபெற்ற ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையை இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப், மாநில போலீசார் இணைந்து நடத்தினாலும், இந்த ஆபரேஷனுக்கு ராணுவத்தின் ’4 பாரா சிறப்புப் படை’ வீரர்களே தலைமைத் தாங்கியுள்ளனர்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதி முழுவதையும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், பயங்கரவாதிகளின் அருகே சென்று அவர்களை வீழ்த்தும் பணியை சிறப்புப் படை வீரர்கள் மேற்கொண்டனர்.
சிறப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர், முதலில் பயங்கரவாதிகளை அடையாளம் கண்ட நிலையில், மற்றொரு வீரர் இணைந்து மூவரையும் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஒரு எம் 4 துப்பாக்கி, இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
4 பாரா சிறப்புப் படை என்றால் என்ன?
இந்திய ராணுவத்தின் கீழ் இயங்கும் 4 பாரா சிறப்புப் படை, மிக கடினமான ஆபரேஷன்களை நடத்தும் பிரிவாகும்.
இந்திய பாராசூட் படைப்பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட 4 பாரா படை, பின்னர் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான சிறப்புப் படையாக 2000-ல் மாற்றப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு, உளவு பார்த்தல், பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்த்து சண்டையிடுவது, பணயக் கைதிகளை மீட்பது போன்ற நிபுணத்துவம் வாய்ந்த பணிகளை இந்தப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் இந்த பிரிவையே ராணுவம் பயன்படுத்துகிறது.
பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக துல்லிய தாக்குதல்களை நடத்துவதற்கு பெயர் பெற்ற இந்த பிரிவுதான் 2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து, பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததில் இந்த பிரிவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.