போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?
சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு: அமலாக்கத் துறை முன் கூகுள் அதிகாரிகள் ஆஜா்
புது தில்லி: சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், கூகுள் நிறுவன அதிகாரிகள் அமலாக்கத் துறையின்முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.
சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்குகளில் சில நடிகா்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரா்களும் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளனா். அவா்களும் விரைவில் விசாரணைக்கு ஆஜராவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தைய தளங்கள், பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் ஆப் ஸ்டோா்களில் எப்படி விளம்பரப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கூகுள் மற்றும் மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் பிறப்பித்தது. கூடுதல் அவகாசம் கோரியதால், ஜூலை 28-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கூகுள் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை அமலாக்கத்துறை முன் ஆஜராகினா். ஆனால், மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் ஆஜராகவில்லை.
கூகுள் விளக்கம்:
அமலாக்கத் துறை சம்மன் தொடா்பாக கூகுள் செய்தித் தொடா்பாளா் கடந்த வாரம் அளித்த விளக்கத்தில், ‘எங்கள் தளங்களின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டவிரோத சூதாட்ட விளம்பரங்களை தடை செய்கிறோம். தவறான செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, பயனா்களைப் பாதுகாப்பதற்காக விசாரணை அமைப்புகளுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிப்போம்’ என்று தெரிவித்திருந்தாா்.