புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்
தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல: கனிமொழி பேச்சு
தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர்,
"தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமைச்சர் அமித் ஷா பேசினார். தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல, தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை. நாங்கள் இந்த தேசத்தோடுதான் நிற்கிறோம்!
இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களை பிரிக்காதீர்கள். விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்?
பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்கிறது?
மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
தீவிரவாத தாக்குதலை தடுக்காவிட்டாலும் அதில் இருந்து விஸ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்? சோஃபியா குரேஷியை அவமதித்த அமைச்சர் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசியலுக்காக ஏன் நாட்டை பிரித்தாள பார்க்கிறீர்கள்? மதரீதியாக நாட்டில் பிரிவினையை உருவாக்குவதுடன், வெறுப்புணர்வையும் பரப்புவது ஏன்?
காங்கிரஸ் கட்சியினர் நேருவை நினைவில் வைத்திருப்பதைவிட பாஜகவினர் ஒவ்வொரு முறையும் நினைவு கூறுகிறார்கள். நான் அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார், அம்பேத்கர் பற்றி படிக்கும் தமிழக இளைஞர்கள் இப்போது நேரு பற்றியும் படிக்கிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் பெருமைகள் மற்றும் கலாசாரம் மீது திடீர் அன்பு, பாசம் எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் கீழடி அறிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது.
பிரதமர் மோடி சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்துள்ளார். சோழன் கங்கையை கொண்டான், கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று பேசியுள்ளார்.