நெல்லை ஆணவக் கொலை: IT ஊழியரை ஓட ஓட வெட்டிக் கொன்ற போலீஸ் குடும்பம் | Decode
தருமபுரி அருகே சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை
தருமபுரி: தருமபுரி அருகே கொல்லம்பட்டி சாலையில் சேதமடைந்துள்ள பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைக்க அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருபுரியிலிருந்து திருப்பத்தூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கொல்லப்பட்டி சாலை அமைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொல்லப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கொல்லப்பட்டி, மூலக்காடு, தாலிக்காரன்கொட்டாய் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கு பிரதான சாலையாக இந்த சாலை இருந்து வருகிறது. இந்த சாலையில் சனத்குமாா் ஆற்றின் குறுக்கே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.
தற்போது இந்த பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
பாலம் குறுகியதாகவும், சேதமடைந்தும் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாலத்தின் பக்கவாட்டில் இருபுறமும் அமைக்கப்பட்டுள் தடுப்புச் சுவா்களும் உடைந்துள்ளன. இதனால் சில நேரங்களில் ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்துவிடும் வாய்ப்புள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.