கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்
ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இதுபற்றி விளக்கம் அளித்து இன்று (திங்கள்கிழமை) விவாதத்தை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து மக்களவையில், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
இதில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., சு.வெங்கடேசன் பேசியதாவது,
''பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது. 2016 உரி தாக்குதல் நடந்தபோது ஆளும் கட்சி என்ன சொன்னதோ; பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு ஆளும் கட்சி என்ன சொன்னதோ, அதையேதான் பஹல்காம் தாக்குதலின்போதும் ஆளும் கட்சி கூறுகிறது.
பஹல்காமில் தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணிநேரத்துக்குப் பிறகுதான் உதவியோ, தகவலோ அரசுக்கு கிட்டியிருக்கிறது என்ற செய்து வெட்கக்கேடானது. இது அரசின் தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்பது.
பஹல்காம் தாக்குதல் செய்தி கேட்ட உடனேயே, தனது செளதி பயணத்தைக் குறுக்கிக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார் பிரதமர் மோடி. அவர் ஜம்மு - காஷ்மீருக்குச் செல்வார் என நாடே எதிர்பார்த்தபோது, பிகாரின் தேர்தல் பணிக்குச் சென்றார். அவருக்கு நாட்டு மக்களின் நலனை விட தேர்தலே முக்கியம்.
இந்தப் பிரச்னையில் அதிகம் தோல்வி அடைந்துள்ளது உள்கட்சி நிர்வாகமா? வெளியுறவுக் கொள்கை நிர்வாகமா?.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து, ஆபரேஷன் சிந்தூரையும் சோழர்களின் போரையும் ஒப்பிட்டுப் பேசினார். சோழர்கள் தொடங்கிய போரை சோழர்களேதான் முடித்தனர். மாற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.
மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் போரை அமெரிக்கா முடித்து வைத்ததாக 25 முறை கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் டிரம்ப். இதற்கு பிரதமர் மோடி என்ன சொல்லப்போகிறார்?
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சரால் கர்னல் சோஃபியா குரேஷிக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து ஒருமுறை கூட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசவில்லை. பஹல்காம் தாக்குதலின்போது மக்கள் உயிரைக் காத்த குதிரை வளர்ப்பவர் குறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. பயங்கரவாதிகள் தாக்குதலின்போது, சுற்றுலாவுக்கு வந்தவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர்கள் ஜம்மு - காஷ்மீர் மக்கள். மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்த நினைக்காதீர்கள் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க |ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்