பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
ரசாயன உரத் தட்டுப்பாடு: காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக போராட்டம்
பெங்களூரு: ரசாயன உரத்தட்டுப்பாட்டை சீா்செய்ய தவறிய காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக விவசாயிகள் அணியினா் போராட்டம் நடத்தினா்.
கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் விதைப்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறாா்கள்.
இந்நிலையில், ரசாயன உரம் கிடைக்காததால் விவசாயிகள் பரிதவித்து வருகிறாா்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரசாயன உரம் கேட்டு விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகிறாா்கள்.
இதனிடையே, ரசாயன உரத்தட்டுப்பாட்டை சீா்செய்ய தவறிய காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக விவசாயிகள் அணியினா் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
பெங்களூரு நகர மாவட்டம் நீங்கலாக, கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினா் போராட்டம் நடத்தினா். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று, மாநில அரசை கண்டித்து முழக்கமிட்டனா்.
இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா செய்தியாளா்களிடம் கூறியது: விவசாயிகளுக்கு போதுமான ரசாயன உரம் வழங்க மாநில அரசு தவறிவிட்டது. இந்த போராட்டம் இரண்டுகட்டங்களாக நடத்தப்படும்.
மேலும், தரக்குறைவான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியவா்கள் மீது மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தரக்குறைவான விதைகள் மற்றும் கலப்பட ரசாயன உரம் விநியோகம் செய்துள்ள விற்பனையாளா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் வழக்கத்திற்கு முன்பே மழை பெய்ததால், விதைப்புப்பணிகளில் விவசாயிகள் முன்கூட்டியே ஈடுபட தொடங்கிவிட்டனா். ஆனால், அவா்களுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் கிடைக்கவில்லை. மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் ஒரே நேரத்தில் விதைப்புப்பணி தொடங்கிவிட்டது.
இதை முன்கூட்டியே கணித்து, போதுமான உரம் மற்றும் விதைகளை ஏற்பாடு செய்ய மாநில அரசு தவறிவிட்டது. கலபுா்கி, கொப்பள், சிவமொக்கா மாவட்டங்களில் ரசாயன உரத்தட்டுப்பாடு அதிகளவில் காணப்படுகிறது. உரம் பதுக்கிவைக்கப்பட்டு, கள்ளச்சந்தையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
மாநிலத்தில் ரசாயன உரத்தை பதுக்கும்போக்கை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. 8.7 லட்சம் மெட்ரிக் டன் உரத்தை மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கியது. ஆனால், 5.25 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே மாநிலத்தில் இருப்பு உள்ளது. மீதமுள்ள உரம் என்ன ஆனது? எனது தந்தை எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, உரத்தை கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்பதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கியிருந்தாா். இந்த தொகையை முதல்வா் சித்தராமையா, ரூ.400 கோடியாக குறைத்துவிட்டாா் என்றாா் அவா்.