"பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்...
அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியைக் குறிப்பிட்டு அதில், அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேசவில்லை என ஜெய்சங்கர் கூறியுள்ளாரே தவிர, திட்டவட்டமாக அவர் மறுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இதுபற்றி விளக்கம் அளித்து இன்று (திங்கள்கிழமை) விவாதத்தை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துப் பேசியிருந்தார். பிறகு, ஜூன் 17ஆம் தேதி, கனடாவில் சந்திக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பேசியிருந்தார்.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளதாக மற்ற நாடுகளில் இருந்து மே 10ஆம் தேதி அழைப்பு வந்தது. ராணுவ நடவடிக்கைகளின் தலைமை தளபதி மூலம் இதனைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டோம். எந்தவொரு நிலையிலும் அமெரிக்காவுடன் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசவில்லை. வணிக ரீதியான எந்தவொரு பேச்சும் நடக்கவில்லை என ஜெய்சங்கர் பேசியிருந்தார்.
அவரின் இந்தப் பேச்சு குறித்து, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த பிரியங்கா காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், சில விஷயங்களை அவர் (ஜெய்சங்கர்) திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், சில விஷயங்களை அவர் அவ்வாறு கூறவில்லை. போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையிடவில்லை என அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை. குறிப்பிட்ட இடைவெளியைக் குறிப்பிட்டு, அதில் அதிபர் டிரம்ப்புடன் மோடி பேசவில்லை எனக் கூறுகிறார். ஆனால், அமெரிக்காவின் தலையீடு இல்லை என அவர் கூறவில்லை. இதுவே இந்த விவாதத்தை நீட்டிக்கச் செய்கிறது எனக் குறிப்பிட்டார்.