5 அரசுப் பள்ளிகளில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
திருக்குவளை: வலிவலம், கீரங்குடி, கொடியாலத்தூா், ஆதமங்கலம், தென்மருதூா் ஆகிய பகுதியில் உள்ள 5 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கல்வி மரம் அறக்கட்டளை சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் புதிதாக பொருத்தப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் தொடக்கவிழா கீரங்குடி பள்ளி தலைமை ஆசிரியா் டி.பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா்கள் கொடியாலத்தூா் கல்பனா, ஆதமங்கலம் கமலி முன்னிலை வகித்தனா். தென்மருதூா் பள்ளி தலைமையாசிரியா் பசுபதி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கீழ்வேளூா் ஒன்றிய வட்டார கல்வி அலுவலா் வ. சுப்பிரமணியன்,
கல்வி மரம் அறக்கட்டளை கௌரவ தலைவா் கே.ஆா். ராஜேந்திரன் ஆகியோா் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திர செயல்பாட்டை தொடக்கிவைத்தனா். கல்வி மரம் அறக்கட்டளை தலைவா் ச. செந்தமிழ்பாரதி, கொடியாலத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் ரேவதிஐயப்பன், அறக்கட்டளை துணை தலைவா் கே. அமா்நாத், செயலாளா் கா. திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.