ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு...
ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பாராட்ட பெங்களூரில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பெருங்கூட்டம் திரண்டது. அதில் இளம் பருவ ஆண், பெண்களே அதிகம்.
முறையான திட்டமிடலின்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் உண்டானது. அதில் 11 உயிர்கள் பறிபோயின. இந்தச் சம்பவம் நாடெங்கிலும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, பெங்களூரு காவல் ஆணையர் உள்பட முக்கிய அதிகாரிகள் சிலர் பனியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தாவை பணியிடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) திரும்பப் பெற்றுள்ளது. அவருடன் சேர்த்து காவல் துறை துணை ஆணையர் ஷேகர் எச். தெக்கனவர் (ஐபிஎஸ்), உதவி ஆணையர் சி. பாலகிருஷ்ணா, காவல் ஆய்வாளர் கே. கிரீஷ் என மொத்தம் நான்கு காவல் துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் மாநில அரசின் உத்தரவின்கீழ் விசாரணையை நடத்தியது.
அந்த ஆணையம் விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், விரிவானதொரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட அதிகாரிகளும் தங்கள் பணியிடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில், அவர்கள் தங்களது பணியில் உடனடியாக இணைய உத்தரவிடப்படுகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.