நில அபகரிப்பு புகார் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதுதில்லி: நில அபகரிப்பு புகார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்னா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் நிலத்தை சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மா.சுப்பிரமணியன் மாற்றியதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப் பதிவு விசாரித்தது. 2019}இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
"1998ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இடத்துக்கு 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறி வழக்கை ரத்து செய்ய மா.சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையைத் தொடரவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அரவிந்த் குமார் ஆகியோர் தமிழக அரசு, சத்தியமூர்த்தி, பார்த்திபன் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டு செப்டம்பர் 16}ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.