இங்கிலாந்தில் ஜடேஜாவின் தனித்துவமான சாதனை!
இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜா தனித்துவமான சாதனை நிகழ்த்தியுள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் வேட்டை நடத்தியதல் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இமாலய இலக்கை சேஸிங் செய்த முதல் ஓவரிலேயே 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோத்த கே.எல்.ராகுல் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை விக்கெட்டினை இழக்காமல் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 27) முடிவடைந்த நான்காம் டெஸ்ட்டிலும் ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் 6-ஆவது வீரராக களமிறங்கி 185 பந்துகளைச் சந்தித்து 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்தில் இந்திய அணியைச் சேர்ந்த ஒரு வீரர் 6-ஆவது வீரராக அல்லது அதற்கும் கீழ் நிலையில் களமிறங்கி, இரண்டு முறை சதம் விளாசியிருப்பது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜா தனித்துவமான சாதனை நிகழ்த்தியுள்ளார்.