இந்திய அணியின் முடிவு சரியே; ஆதரவளிக்கும் முன்னாள் வீரர்கள்!
போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ளக் கூறிய இங்கிலாந்தின் முடிவை ஏற்காமல் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது சரியே என முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. போட்டியின் கடைசி நாளான நேற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன் பின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்தினர். போட்டியும் டிரா ஆனது.
இந்திய அணியின் முடிவு சரியானது
மான்செஸ்டர் டெஸ்ட்டின் கடைசி நாளான நேற்று (ஜூலை 27), முதல் செஷனில் கே.எல்.ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அசைக்க முடியாத அளவுக்கு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. ஜடேஜா 89 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். போட்டி நிறைவடைய கடைசி ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. இந்த சூழலில் நடுவர்கள் டிரா செய்வது குறித்து கேட்க, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிரா செய்வதற்கு ஒப்புக்கொண்டு களத்தில் உள்ள வீரர்களுடன் கை குலுக்கத் தயாரானார்.
இருப்பினும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதத்தை நெருங்கி விளையாடிக் கொண்டிருந்ததால், இந்திய அணி போட்டியைத் தொடர விரும்பியது. இங்கு தொடங்கியது இங்கிலாந்து அணியின் கோபம் மற்றும் விரக்தி. விக்கெட் வீழ்த்த முடியாத விரக்தியை அவர்கள் களத்தில் வெளிப்படுத்தியதை அனைவராலும் பார்க்க முடிந்தது. இந்த சலசலப்பினால் போட்டி தொடங்குவது சற்று தாமதம் ஆனது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிரா செய்யக் கூறி கேட்டதை இந்திய அணி ஏற்றுக்கொள்ளாதது சரியே என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இரண்டு நிலைப்பாடு என்ற வார்த்தையை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இங்கிலாந்து அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் இந்திய அணி வீரர்கள் (ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்) நாள் முழுவதும் விளையாடினார்கள். ஆனால், அவர்கள் சதத்தினை நெருங்கும்போது, இங்கிலாந்து அணி டிரா செய்து வெளியேற நினைக்கிறது. அவர்கள் ஏன் டிரா செய்ய வேண்டும்? காலை முதல் உங்கள் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் விளையாடி போட்டியை டிரா நோக்கி எடுத்துச் சென்றனர். அவர்கள் கடினமாக உழைத்துள்ளார்கள். அவர்களை எப்படி சதங்களை விட்டுக்கொடுங்கள் எனக் கூற முடியும். நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால், மீதமுள்ள 15 ஓவர்களையும் பேட்டிங் செய்ய கூறியிருப்பேன்.
இங்கிலாந்து அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜாவை சூழ்ந்துகொண்டு கிண்டலாக பேசத் தொடங்கிவிட்டனர். பகுதி நேர பந்துவீச்சாளர் ஹாரி ப்ரூக்குக்கு எதிராக நீங்கள் சதமடிக்க விரும்புகிறீகளா என கேட்டுள்ளனர். ஜடேஜா சதமடிக்க விரும்புகிறார். நீங்கள் ஸ்டீவ் ஹார்மிசன், ஆண்ட்ரூ ஃபிளிண்ட் ஆஃப் யாரை வேண்டுமானாலும், பந்துவீச அழைத்து வாருங்கள். களத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஹாரி ப்ரூக்கை பந்துவீச எடுத்து வந்தது உங்கள் முடிவு, இந்திய அணியின் முடிவல்ல.
இந்த போட்டியில் குவிக்கப்பட்ட ரன்கள் டெஸ்ட் ரன்கள். இந்த சதங்களுக்கு அவர்கள் (ஜடேஜா, சுந்தர்) இருவரும் மிகவும் தகுதியானவர்கள். மிகப் பெரிய சாதனையை நோக்கி நகரும்போது, டிரா செய்ய ஒப்புக்கொள்ளாமல் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. இங்கிலாந்து அணி டிரா செய்யக் கூறியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பந்துவீச்சாளர்களை சோர்வைய செய்யக் கூடாது என்பது முதல் காரணம். விக்கெட் எடுக்க முடியவில்லை என அவர்கள் விரக்தியடைந்துவிட்டனர் என்பது இரண்டாவது காரணம். கிரிக்கெட் இப்படிதான் இருக்கும்.
சுனில் கவாஸ்கர்
இந்திய அணியை 15 ஓவர்கள் முழுவதும் பேட்டிங் செய்து, இங்கிலாந்து அணியை ஃபீல்டிங்கில் இருக்க வையுங்கள் எனக் கூறியிருப்பேன்.
பிராட் ஹேடின் (முன்னாள் ஆஸி. வீரர்)
இங்கிலாந்து அணி மோசமான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தியுள்ளது. போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியாது எனத் தெரிந்தவுடன், போட்டியை முடித்துக் கொள்ள நினைத்தனர். டிரா முடிவை இந்திய அணி ஏற்காததை நான் வரவேற்கிறேன். அவர்கள் நினைக்கும் வரை பேட்டிங்கை தொடரும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.
கடின உழைப்பைக் கொடுத்து விளையாடிய ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு சதம் விளாசும் வரை விளையாடும் உரிமை இருக்கிறது. போட்டி இங்கிலாந்துக்கு சாதகமாக போகவில்லை எனத் தெரிந்தவுடன் அவர்கள் ஏதேதோ பேசத் தொடங்கிவிட்டனர். சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
அலெஸ்டர் குக் (முன்னாள் இங்கிலாந்து கேப்டன்)
இந்திய அணி டிரா முடிவை ஏற்காமல் தொடர்ந்து பேட்டிங் செய்தது சரியான முடிவே. சாதனைகள் படைக்கப் போகிறோம் எனத் தெரியும்போது, தொடர்ந்து பேட்டிங் செய்ததில் தவறு எதுவும் இல்லை. 140 ஓவர்கள் ஃபீல்டிங் செய்யும்போது, கோபம் என்பது இருக்கும். விக்கெட் எடுக்க முடியவில்லை என்ற கோபம் இங்கிலாந்து அணிக்கு இருந்தது. ஆனால், இந்திய அணி எதற்காக பேட்டிங்கை தொடர்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
நாசர் ஹுசைன்(முன்னாள் இங்கிலாந்து கேப்டன்)
இந்திய அணி பேட்டிங்கைத் தொடர்ந்ததில் எந்த ஒரு பிரச்னையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து அணிக்கு ஏதோ பிரச்னை இருந்துள்ளது. அவர்கள் சற்று சோர்வடைந்துவிட்டனர். அதனால், அவர்கள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள விரும்பினர். ஆனால், கடின உழைப்பைக் கொடுத்து இரண்டு வீரர்கள் சதங்களை நெருங்கியுள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் ஹாரி ப்ரூக்கை பந்துவீச்சில் எடுத்து வந்தது குழந்தைத் தனமாக இருந்தது. இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
இதையும் படிக்க: 5-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுகிறாரா? ஷுப்மன் கில் கூறுவதென்ன?