மாணவ, மாணவிகள் "அப்பா, அப்பா" என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
Doctor Vikatan: நடிகர் அஜித்: வெந்நீரும் புரோட்டீனும் எடுத்துதான் எடையைக் குறைத்தாரா?
Doctor Vikatan: சமீபத்தில் பயங்கரமாக உடல் எடை குறைந்திருக்கிறார். 90 நாள்களுக்கு வெறும் வெந்நீரும் புரோட்டீனும் மட்டுமே எடுத்துக்கொண்டுதான் எடை குறைத்தார் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. இப்படி வெறும் வெந்நீரும் புரோட்டீனும் மட்டும் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானதா.... அந்த முறையில் எடையைக் குறைப்பது சரியானதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
பிரபலங்களின் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஆயிரம் காரணங்கள், அர்த்தங்கள் சொல்லப்படலாம். அவற்றில் எது உண்மை என்பது சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமே தெரியும். நடிகர் அஜித் விஷயத்திலும் அவர்து எடைக்குறைப்பு ரகசிய பின்னணிக்கு அனுமானத்தின் அடிப்படையில் நாம் கருத்து சொல்ல முடியாது.
எடைக்குறைப்பு முயற்சி என்பது எப்போதுமே ஆரோக்கியமான முறையில் பின்பற்றப்பட வேண்டியது. அந்த வகையில், பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றி, எடையைக் குறைப்பதுதான் சரியானது. வெறும் வெந்நீரையும் புரோட்டீனையும் மட்டும் எடுத்துக்கொண்டு எடையைக் குறைப்பது என்பதை ஆரோக்கியமான எடைக்குறைப்பாகக் கருத முடியாது.
நடிகர் அஜித் உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பது நமக்கெல்லாம் தெரியும். நடிப்பைத் தவிர, பைக் ரேசிங்கிலும் தீவிரமாக ஈடுபடும் அவருக்கு, சரியான முறையில் எடையைக் குறைக்க வேண்டியதன் அவசியம் நிச்சயம் தெரிந்திருக்கும். அவர் தனக்கென டயட்டீஷியன், ஃபிட்னெஸ் டிரெய்னர், மருத்துவர் என ஒரு குழுவை நிச்சயம் வைத்திருப்பார். அவர்களது வழிகாட்டுதலின் பேரில்தான் எடையைக் குறைத்திருப்பார். அந்த வகையில் அது ஆரோக்கியமான எடைக்குறைப்பாகத்தான் இருக்கும்.
இன்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் எடைக்குறைப்பு டிப்ஸையும், பிரபலங்களின் எடைக்குறைப்பு முயற்சிகளையும் பார்த்து தானும் அவற்றைப் பின்பற்றி வெயிட்லாஸ் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் பலர். எடைக்குறைப்பு அட்வைஸ் என்பது ஆளாளுக்கு வேறுபடும். உங்களுடைய தேவை என்ன, எடைக்குறைப்பில் உங்களுடைய இலக்கு என்ன, உங்களுடைய வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது, நீங்கள் வொர்க் அவுட் செய்பவரா, உங்களுடைய உணவுப்பழக்கம் எப்படிப்பட்டது போன்ற பல விஷயங்களையும் ஆராய்ந்துதான் உங்களுக்கான வெயிட்லாஸ் பிளான் பரிந்துரைக்கப்படும். பிரபலங்களின் லைஃப்ஸ்டைல் வேறு மாதிரி இருக்கும். அதை எல்லோரும் பின்பற்ற முடியாது, பின்பற்றவும் கூடாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.