தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்...
Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதில் artificial sweeteners சாப்பிடலாமா?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு பத்து வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. அவரால் இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, காபி, டீ போன்றவற்றுக்கு வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக்கொள்வார். அதேபோல கேசரி, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றில் எல்லாம் செயற்கை இனிப்பூட்டி சேர்த்துச் செய்து சாப்பிடுகிறார். சர்க்கரை நோயாளிகள் artificial sweeteners அல்லது வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை எடுத்துக்கொள்வது சரியா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
செயற்கை இனிப்பூட்டிகள் என்பவை நீரிழிவு நோயாளிகளைக் குறிவைத்தே மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. பல வருடங்களாக இனிப்பு சாப்பிட்டுப் பழகியவர்களை, சர்க்கரை நோய் வந்துவிட்டதால், திடீரென இனிமேல் இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள ரொம்பவே போராடுவார்கள். இனிப்பு இல்லாமல் எதையுமே சாப்பிட முடியாது என்று சொல்லும் பலரைப் பார்க்கலாம்.
நீரிழிவு பாதித்தவர்கள், செயற்கை இனிப்பூட்டிகளை (artificial sweeteners) எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அதாவது அவர்கள் தினமும் குடிக்கும் காபி, டீ போன்றவற்றில் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பாயசம் போன்றவற்றில் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், வெள்ளைச் சர்க்கரை சேர்த்துச் செய்கிற எல்லா உணவுகளிலும் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம் போல... அது ஆரோக்கியமானது என நினைத்துக்கொள்வது மிகவும் தவறு. அதாவது கலோரி அதிகமான மாவு, நெய், எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றோடு செயற்கை இனிப்பூட்டிகளையும் சேர்த்துச் செய்து சாப்பிடும்போது நிச்சயம் அது பக்க விளைவுகளையே காட்டும். செயற்கை இனிப்பூட்டியோடு, அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் எல்லாம் சேரும்போது அது ரத்தச் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவுகளை நிச்சயம் அதிகரிக்கும்.
எனவே, ஒருநாளைக்கு ஒன்று அல்லது இருமுறை காபி, டீ போன்றவற்றில் செயற்கை இனிப்பூட்டிகளைச் சேர்த்துக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளைச் சர்க்கரைதான் கேடு... வெல்லமோ, கருப்பட்டியோ, தேனோ ஆரோக்கியமானது என நினைத்துக்கொண்டு பலரும் அவற்றுக்கு மாறுவதைப் பார்க்கிறோம். வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தும்போது நமக்கு அளவு தெரியும். ஆனால், தேன், வெல்லம் போன்றவற்றுக்கு மாறும்போது, வெள்ளைச் சர்க்கரையின் அதே இனிப்புச் சுவையை மேட்ச் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து, அளவுக்கு அதிகமாக அவற்றைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
எனவே, முதல் முயற்சியாக வெள்ளைச் சர்க்கரையின் அளவைக் குறைக்கப் பாருங்கள். அரை இனிப்பு, கால் இனிப்புக்குப் பழகிய பிறகு, நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம் போன்றவற்றுக்கு மாறினால், அவற்றை அதிகம் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.