Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?
Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 65 வயதாகிறது. அவருக்கு லேசான காய்ச்சல் அடித்தாலே உடனே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னால் கேட்க மாட்டார். இப்படி காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் போடுவது சரியா அல்லது உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

காய்ச்சலைத் தணிக்க பாராசிட்டமால்தான் சிறந்த மருந்து. அது அவரவர் எடைக்கேற்ப எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். காய்ச்சல் 102 டிகிரியை தாண்டினால் உடல்வலி, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பலவீனம், தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்காதது போன்றவை சேர்ந்துகொள்ளும்.
காய்ச்சலுக்கான உணவு
தண்ணீர்கூட பிடிக்கவில்லை என்பதற்காக அதை அறவே தவிர்ப்பது ஆபத்தானது. 'நான்- கார்பனேட்டடு' (Non-Carbonated ) பானங்களை, குளிர்ச்சியின்றி குடிக்கலாம்.
மாம்பழம், லிச்சி, க்ரான்பெர்ரி என வாய்க்குப் பிடித்த சுவையில் இதைக் குடிக்கலாம். டீ, பால், அரிசி நொய்க் கஞ்சி போன்றவற்றையும் சிறந்த உணவுகள்.
நீர்ச்சத்து அவசியம்
காய்ச்சல் குறையும்போது வியர்க்கும். அந்த வியர்வையின் மூலம் நாம் இழக்கும் நீர்ச்சத்து மற்றும் உப்பை ஈடுகட்டவும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம்.
காய்ச்சலின்போது தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படையான விஷயம். அதனால்தான் காய்ச்சல் மிக அதிகமாகி, உடல் சோர்வாகி மருத்துவரை அணுகும்போது குளுக்கோஸ் ஏற்ற அறிவுறுத்துகிறார்கள்.
குளுக்கோஸ் ஏற்றியதும் உடல் இன்ஸ்டன்ட் எனர்ஜி பெறுவதை உணர்வதன் பின்னணியும் இதுதான்.

மருந்து
ஆரம்பநிலை காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். 5 நாள்களுக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்தாலோ, 102 டிரிக்கு மேல் காய்ச்சல் அதிகரித்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து கொள்வதுதான் சரியானது.
மருத்துவர் அந்தந்த சீசனில் பரவும் காய்ச்சலின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து டெங்கு, மலேரியா, டைபாய்டு, கொரோனா போன்றவற்றுக்கான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.
டெங்கு காய்ச்சலில் தட்டணுக்கள் குறையும். அது ஆபத்தான நிலை என்பதால் காய்ச்சல் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் பிளட் கல்ச்சர், யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளும் பரிந்துரைக்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.