கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
Gambhir: ``கம்பீர் நிச்சயம் அதைச் செய்வார்..." -இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும், சாம்பியன் அணி அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று பெரும் எதிர்பார்ப்பு கூடியதும். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நீர்த்துப்போகும் வகையில் முதல் அடியாக இலங்கையுடன் 27 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது.
அதோடு நின்றதா என்றால், சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 - 0 என வரலாற்றுத் தோல்வியடைந்து. அதைத்தொடர்ந்து, பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 1 - 3 என தோல்வி, அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்லும் எளிய வாய்ப்பைத் தவறவிட்டது என படுமோசமாகச் செயல்பட்டது இந்திய அணி.
பொறுப்பு அதிகமுள்ள ரோஹித், கோலி போன்றோர்கள் தங்களின் சொதப்பலான பேட்டிங்கால் ஒருபக்கம் கடுமையான விமர்சனங்கள் எதிர்கொள்ள, மறுபக்கம் தலைமைப் பயிற்சியாளர் என்ற முறையில் கவுதம் கம்பீரும் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இத்தகைய சூழலில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோட்டமாக, இங்கிலாந்து அணிக்கெதிராக நாளை கொல்கத்தாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து, மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரும் நடைபெறவிருக்கிறது. இதில், டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றும் பட்சத்தில், இந்தியாவுக்கெதிராக டி20 தொடரில் 2016-17 முதல் அடைந்துவரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதனால், இந்தியா அணி இந்த டி20 தொடரைக் கைப்பற்றி தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இங்கிலாந்தை வீழ்த்துமா அல்லது கவுதம் கம்பீர் பயிற்சியில் இந்தியாவின் சமீபகால தோல்வி தொடருமா என்ற விவாதம் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், கவுதம் கம்பீரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மெக்கல்லம், ``கவுதம் கம்பீருடன் இதற்கு முன்பு நான் பணியாற்றியிருக்கிறேன். அவர் சிறந்த மற்றும் வலிமையான தலைவர். இதற்கு முன்னர், அவர் இருந்த எந்தவொரு தலைமைப் பதவியிலும் சிறந்து விளங்கியிருக்கிறார். தற்போதைய அணியுடன் அவர் சென்றுகொண்டிருக்கிறார். நிச்சயம் தனக்குக் கிடைத்த அணியிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிகொண்டுவருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பிறகு, அதை எதிர்கொள்ள எங்களது பாணியில் ஒரு வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்." என்று கூறினார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...