Sachin: ``என்னுடைய அம்மாவுக்காக என் கடைசிப் போட்டி மும்பையில் நடந்தது'' - உண்மையைப் பகிர்ந்த சச்சின்
உலக கிரிக்கெட் வரலாற்றை எப்போது எழுதினாலும் அதில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார். மும்பையைச் சேர்ந்த இவர் சதங்களில் சதம், அதிக சர்வதேச ரன்கள், அதிக சர்வதேச போட்டிகள் என பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இந்த மாடர்ன் டே கிரிக்கெட்டிலும் கூட சச்சினின் சாதனைகளை முறியடிப்பது தற்போதைய வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இவ்வாறு பல்வேறு பெருமைகளுக்குரிய சச்சின், 2013 நவம்பர் 14 - 16 தனது சொந்த ஊரான மும்பையில் வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கண்ணீரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் சச்சின். இந்த நிலையில், தன்னுடைய கடைசி சர்வதேச போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) கோரிக்கை வைத்ததற்கான காரணத்தை சச்சின் பகிர்ந்திருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் ஊடக நிகழ்ச்சியொன்றில் மும்பை வான்கடே மைதானத்தில் தனது நினைவுகளைப் பகிரும்போது தனது கடைசிப் போட்டி குறித்து பேசிய சச்சின், ``அந்தத் தொடர் நடைபெறுவதற்கு முன்பு BCCI தலைவர் சீனிவாசனை ஒரு கோரிக்கையுடன் தொடர்புகொண்டேன். என்னுடைய தனிப்பட்ட காரணத்துக்காக, எனது கடைசி போட்டியை மும்பையில் நடைபெற விரும்புவதாக அவரிடம் கூறினேன். 24 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடினேன். ஆனால், நான் விளையாடுவதை என் அம்மா நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை.
அந்த சமயத்தில், வெளியில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. வான்கடேவைத் தவிர வேறு எந்த இடத்துக்கும் அவரால் செல்ல முடியவில்லை. அதனால், எனது இறுதி ஆட்டத்தில் என் தாயார் உடனிருக்க வேண்டும் என்று ஒரு இதயப்பூர்வமான வேண்டுகோள் வைத்தேன். அவரால் அதைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது. BCCI எனது விருப்பத்தைப் புரிந்துகொண்டு போட்டியை வான்கடேவில் நடத்த ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த தருணம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. ஏனெனில், அது ஒரு நீண்ட பயணத்தின் முடிவைப் பற்றியது. மேலும், அதுபோன்ற ஒரு தருணத்தை நான் ஒருபோதும் உணர முடியாது என்று எனக்குத் தெரியும். பேட்டிங் செய்ய நான் கிரீஸுக்குள் வந்தபோது, என்னுடைய உணர்வுகளை நான் கட்டுப்படுத்த முயன்றேன். வெஸ்ட் இண்டீஸ் அணி மிகுந்த மரியாதையைக் காட்டியது. ரசிகர்கள் கூட்டம் எனக்கு நம்பமுடியாத வரவேற்பைக் கொடுத்தது.
என் கண்களில் கண்ணீர் தேங்கின. இருந்தாலும், விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இறுதி ஓவருக்கு முன்பு பெரிய திரையில் கேமரா என் அம்மாவின் முகத்தைக் காட்டியது. அப்படியே, அஞ்சலி மற்றும் என் குழந்தைகள் என கேமரா நகர்ந்தது. நான் எதிர்பாராத நேரத்தில் வேண்டுமென்றே அதைச் செய்தார்கள். என் உணர்வுகளோடு விளையாடினார்கள்." என்று கூறினார்.
1975 ஜனவரி 23-ம் தேதி திறக்கப்பட்ட மும்பை வான்கடே ஸ்டேடியம், நாளையோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...