மணமாகி இரண்டே மாதங்கள்! பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர், கணவர் பலி!
Gold: '2024-ல் பவுனுக்கு ரூ.12,000 வரை உயர்வு... 2025-ல் எப்படி இருக்கும்?!' - நிபுணர் சொல்வதென்ன?
'ஆபரணம்' என்றாலும் சரி...'ஆத்திர அவசரம்' என்றாலும் சரி...நம் வீடுகளில் முதலில் நினைவிற்கு வருவது 'தங்கம்'. முன்பெல்லாம், ஏதோ கொஞ்சம் 'அப்படி...இப்படி'யாவது புரட்டி வாங்க முடிந்த தங்கம் விலை, இப்போதெல்லாம் எட்டாத உயரத்திற்கு சென்றுவிட்டது.
ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட் - இதிலெல்லாம் முதலீடுகள் இல்லாமல் இருந்தாலும், நிச்சயம் 99 சதவிகித இந்திய வீடுகளில் தங்கம் இல்லாமல் இருக்கவே இருக்காது. ஆனால், தற்போது இருக்கும் சூழல்களில் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை அவ்வளவு எளிதாக வாங்க முடியாது போல.
கடந்த சில ஆண்டுகளாக உலகத்தில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. அதுவும் 2020-ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளின் பொருளாதாரம் சற்று ஆட்டம் கண்டது. இதனால், உலக அளவில் பல மாற்றங்கள் நடந்தது.
தற்போது உலகளாவிய நிலவரங்களை சற்று பார்ப்போம்...
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ரஷ்ய - உக்ரைன் போர்;
ஓராண்டை கடந்துள்ள இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்;
லெபனான், ஈரான், ஏமான் என தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் கரங்கள்;
உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள்;
மேலே சொன்ன காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் தங்களது முதலீடுகளை மாற்றியது;
உலக நாடுகள் தங்கம் வாங்கி குவிப்பது
போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
2024-ல்?!
தங்கம் விலை ட்ரம்பின் பதவியேற்பிற்கு பிறகு, இன்னும் சில மாறுதல்களை காணலாம். இதற்கு அவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் கொள்கைகள் காரணமாக இருக்கும்.
ஏற்கனவே, 2024-ம் ஆண்டு மட்டும், தங்கம் விலை பவுனுக்கு கிட்டதட்ட ரூ.12,000 ஏறியிருக்கிறது. ஆம்...இந்த ஆண்டு பல உச்சங்களை தொட்ட தங்கம் விலை பவுனுக்கு ரூ.59,000 வரை சென்றது.
இந்த ஆண்டு (2024) ஜனவரி 1-ம் தேதி கிராம் ஒன்றுக்கு ரூ.5,910 ஆகவும், பவுன் ஒன்றுக்கு ரூ.47,280 ஆகவும் விற்ற தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. இதைப் பார்த்தலே, தங்கம் விலை எப்படி தாறுமாறாக எகிறிக்கொண்டு போகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
நிபுணர் என்ன கூறுகிறார்?!
ஆக, 2025-ம் ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகிறார்...
"தங்கம் விலையை பொறுத்தவரை, இனி குறைவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. தங்கம் விலை இனி ஏறுமுகத்தில் இருக்கத் தான் அதிக வாய்ப்புகள் உள்ளது.
2025-ம் ஆண்டு தங்கம் விலை பல புதிய உச்சங்களை தொடலாம். 2025-ம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,000 வரை செல்லலாம்...ஒரு பவுனுக்கு ரூ.64,000 வரை செல்லலாம்.
வரும் ஜனவரி 20-ம் தேதி வரை, தங்கம் விலை கொஞ்சம் ஏறுவதும், கொஞ்சம் இறங்குவதுமாக இருந்தாலும், அதன் பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கும்.
2025-ம் ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும்" என்கிறார் அவர்.