செய்திகள் :

Greenland : ட்ரம்ப்பின் அடுத்த ‘டார்கெட்’... கிரீன்லாந்தை அமெரிக்கா ‘கட்டம்’ கட்டுவது ஏன்?

post image

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரச்னைகளில் இருந்து அமெரிக்காவை விலகி இருக்கச் செய்வது, வெளிநாட்டு வர்த்தக நட்பு நாடுகள் மீதான வரிகளை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புவது என ஒரு தளத்தில் இயங்கி வந்தார்.

ஆனால், சமீப நாட்களாக அவர் தனது வெளியுறவுக் கொள்கைகளில் மிகவும் வெளிப்படையாகவே ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக அண்டை நாடுகள் விஷயத்தில்.

முதலில் கனடாவை ஓர் அமெரிக்க மாகாணம் என்று கிண்டலாக தெரிவித்தார். அதன் பின்னர், பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தார். தற்போது தன்னாட்சி நடைபெறும் கிரீன்லாந்தை சொந்தமாக்குவதற்கான தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். 

இந்த பிராந்தியங்களில் அத்தனையும் அமெரிக்க ஆக்கிரப்பதற்கான சாத்தியங்கள் மிக குறைவு என்றாலும் கூட, விரைவில் அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்ப்பிடமிருந்து வெளிப்பட்டுள்ள இந்த வார்த்தைகள் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்ற அவரது கொள்கையின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

பனாமா கால்வாயில் அமெரிக்க கப்பல்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானவையாக இல்லை என்று கூறி அந்த சலசலப்பு அடங்குவதற்குள்ளாகவே தனது சமூக வலைதள பக்கத்தில் கிரீன்லாந்த் மீதான உரிமையும் கட்டுப்பாடும் நிச்சயம் அவசியமானது என்று அமெரிக்கா கருதுவதாக பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் பிடுஃபிக் விண்வெளி தளம் (Pituffik Space Base) கிரீன்லாந்தில் உள்ளது. இப்பகுதி அரிய கனிமங்கள் உள்ளிட்ட அபரிமிதமான இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. மேலும், உலக நாடுகள் தங்களின் வர்த்தக வரம்பை ஆர்க்டிக் வட்டத்தில் விரிவுபடுத்த முயல்கின்றன. குறிப்பாக, ரஷ்யா இந்த பகுதியை ஒரு மூலோபாய சந்தர்ப்பமாக பார்க்கிறது.

2019-ஆம் ஆண்டு அதிபராக இருந்தபோதும், கிரீன்லாந்தை கட்டுப்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை டொனால்டு ட்ரம்ப் உதிர்த்திருந்தார். ஆனால் அது கடைசி வரை எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

ட்ரம்ப்பின் தற்போதைய கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள கிரீன்லாந்து பிரதமர், “நாங்கள் விற்பனைக்கு இல்லை, இனியும் எங்களை வாங்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்துகளில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், பனாமா கால்வாயின் நடுவே அமெரிக்க கொடி நடப்பட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதேபோல ட்ரம்ப்பின் மகன் எரிக் ஒரு படத்தை பகிர்ந்திருந்தார். அதில் கிரீன்லாந்து, கனடா, பனாமா கால்வாய் ஆகியவற்றை அமெரிக்கா ஆன்லைன் ஷாப்பிங் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

ட்ரம்பைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் பலத்தை அதற்கு சாதகமாக பயன்படுத்துவது குறித்த பிரச்சாரம் அவருக்கு இரண்டு வெற்றிகளை வழங்கியிருக்கிறது.

தனது முதல் ஆட்சிக் காலத்தில் மெக்சிகா - அமெரிக்க எல்லையில் ஆயுதமேந்திய வீரர்களை நிறுத்துவது, அதிக கட்டணங்களை விதிப்பது உள்ளிட்ட அச்சுறுத்தல் அவருக்கு பெரிதும் உதவின.  இந்த முறையும் அதேபோன்ற ஓர் உத்தியை ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்புக்குப் பிறகு கையில் எடுக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

இதற்கு புவியியல் ரீதியாக மூன்று காரணங்கள் உள்ளன. ஒரு காலத்தில் டேனிஷ் காலனித்துவ பிராந்தியமாக இருந்த கிரீன்லாந்து, இப்போது டென்மார்க்கின் தன்னாட்சி மாகாணமாக உள்ளது. இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில், கனடாவிலிருந்து பாஃபின் விரிகுடாவின் குறுக்கே அமைந்துள்ளது. பனிப்போரின்போது, அமெரிக்கா மிகப்பெரிய பிடுஃபிக் விண்வெளி தளத்தை நிறுவியது. இதன் மூலம் கிரீன்லாந்தின் முக்கியத்துவம் அதிகரித்தது.

ரஷ்யா, சீனா, வட கொரியாவில் இருந்து அமெரிக்காவை நோக்கி வரும் ஏவுகணைகளை அமெரிக்கா, கிரீன்லாந்தில் இருந்தே கூட கண்காணித்து தடுக்க முடியும். அதேபோல், கிரீன்லாந்தில் இருந்து ஆசியா அல்லது ஐரோப்பாவை நோக்கி ஏவுகணைகளை மிக எளிதாக ஏவ முடியும்.

இரண்டாவதாக, கிரீன்லாந்தில் கிடைக்கும் அரிய கனிமங்கள், மொபைல் போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி அவை வெடிகுண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, இந்த கனிமங்களின் முக்கிய சப்ளையராக இருப்பது சீனா. 

மூன்றாவதாக, புவி வெப்பமடைதல் அதிகரித்து வரும் இந்த சூழலில் பனிப் பாறைகள் உருகி, ஆர்க்டிக் பகுதியில் புதிய நீர்வழிப் பாதைகள் திறக்கப்படலாம். இதன் அடிப்படையில் ரஷ்யா அல்லது சீனாவுக்கு முன்னரே தனக்கென ஓர் இடத்தை ஆர்க்டிக் வட்டத்தில் அமெரிக்கா பிடிக்க விரும்பும்.

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் பார்வை ட்ரம்ப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே படர்ந்துவிட்டது. 1946-ல், இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, அதிபர் ஹாரி ட்ரூமன் கிரீன்லாந்துக்காக டென்மார்க் அரசுக்கு சுமார் 100 மில்லியன் டாலர்கள் வழங்கினார். கிரீன்லாந்தின் சில பகுதிகளுக்கு பதில் அலாஸ்காவின் சில பகுதிகளை பரிமாறிக்கொள்ள ட்ரூமன் முன்வந்தார். ஆனால், இந்த ஒப்பந்தம் கைக்கூடவில்லை.

கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்கா எடுக்கும் எந்தவொரு முயற்சியும் குறிப்பிடத்தக்க அரசியல் தடைகளை எதிர்கொள்ளும். அத்தகைய நடவடிக்கை சர்வதேச சட்டத்தில் மட்டுமின்றி, அமெரிக்கா ஒழுங்குமுறையை நிலைநிறுத்த முயற்சிக்கும் உலக அளவிலும் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க தயாராகி வரும் சூழலில், அவரது வெளியுறவுக் கொள்கை தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து விவாதத்தைத் தூண்டி வருகின்றன. அவரது இந்த கருத்துகள் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதியாக தெரியவில்லை எனினும் நட்பு நாடுகளுடனான அமெரிக்க உறவில் இது கடும் தாக்கம் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.!

Manmohan Singh : 'வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்' - மெளன மொழி பேசியவரின் முழு வரலாறு!

அந்த இரு சம்பவங்கள்!1999 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தெற்கு டெல்லியில் மன்மோகன் சிங் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ்க்காரர்கள் களத்தில் குதித்து தீவிரமாக வேலைப் ப... மேலும் பார்க்க

Manmohan Singh: `BMW வேண்டாமே'- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சி... மேலும் பார்க்க

Annamalai: 'சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு போராட்டம்' - அண்ணாமலை நகர்வுகள் கைகொடுக்குமா?

சமீபத்தில் சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் என பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ம... மேலும் பார்க்க

Manmohan Singh: மோடியின் பணமதிப்பிழப்பும், மன்மோகன் சிங் சொன்னதைப் போலவே சரிந்த GDP-ம்!

மத்தியில் 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் 2016 நவம்பர் 8-ம் தேதி, `இனி ரூ. 500, ரூ. 1000' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியைத் தந்தார் பிரதமர் மோடி. ஒரே நாளில் மொத்த எளிய மக்கள... மேலும் பார்க்க

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப... மேலும் பார்க்க

'அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் துரதிஷ்டவசமானது...' - அமைச்சர் கோவி.செழியன் சொல்வதென்ன?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க