அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!
Heart Beat 2: `இளையராஜா சார் உன் கண்ணீர் தூய்மையாக இருக்குனு சொன்னாரு’ - ஹார்ட் பீட் 2 டீம் பேட்டி
லாங் ஃபார்மெட் சீரிஸாக ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியான 'ஹார்ட் பீட்' வெப் சீரிஸ் பலருக்கும் ஃபேவரைட்!
மெடிகல் கதைக்களத்தில் டிராமா, காதல், காமெடி என கலக்கலாக முதல் சீசனில் கதை சொல்லியிருந்தார்கள்.
இதோ, முதல் சீசனுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசனும் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

இரண்டாவது சீசனின் ரிலீஸையொட்டி 'ஹார்ட் பீட் 2' குழுவைச் சந்தித்து சாட் போட்டோம்.
இரண்டாவது சீசனில் புதியதாக அக்ஷதாவும் இணைந்திருக்கிறார். 'கனா காணும் காலங்கள்' தொடரில் ஸ்டெல்லாவாக நமக்குப் பரிச்சயமானவர் இவர்.
கேள்விகளைக் கேட்டதும் ஒவ்வொரு நபரும் தெளிவான பதில்களைக் கொடுத்தனர்.
'ஹார்ட் பீட்' சீரிஸின் வரவேற்பு கொடுத்த நம்பிக்கை தொடர்பாக முதலில் பேசினார்கள்.
தொடக்கத்தில், "ஆங்கரிங் பண்ணும்போது நம்மை அடையாளப்படுத்துவாங்க. எங்கோ பார்த்த மாதிரி இருக்குனு சொல்வாங்க.
ஆனால், 'ஹார்ட் பீட்' சீரிஸுக்குப் பிறகு 'நீங்க தானே நவீன்னு' சொல்லி மக்கள் அடையாளப்படுத்துறது ரொம்பவே மகிழ்ச்சி," என ராம் பேசி முடித்ததும் சாருகேஷ், "குழந்தைகள்ல இருந்து வயதானவங்க வரைக்கும் சீரிஸோட முதல் சீசனைப் பார்த்திருக்காங்க. அதுவே ரொம்ப மகிழ்ச்சி," என்றார்.

இவர்களைத் தொடர்ந்து பேசிய தீபா பாலு, "நாங்க எல்லோருமே புது நடிகர்கள்.
நான் யூடியூப்லதான் முதன்முதலில் நடிக்கத் தொடங்கினேன். அதுக்குப் பிறகு ஹாட்ஸ்டார் மாதிரியான பெரிய தளத்தில் என்னை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து ஒரு சீரிஸ் பண்ணினது பெரிய விஷயம்.
அதன் மூலமாக நாங்க எல்லோரும் மக்களுக்கு பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கோம்.
பிரஷர் இல்லை... பயம் மட்டும் இருந்தது!
நான் ஒரு முறை விமான நிலையத்தில் சுத்திட்டு இருக்கும்போது ஒரு சின்னக் குழந்தை 'ஹார்ட் பீட்' சீரிஸ் பார்த்து என்னை அடையாளப்படுத்தி பேசினாங்க.
அதெல்லாம் ரொம்பவே ஆச்சரியமான தருணம்தான். சின்னக் குழந்தைகளுக்கும் இந்தக் கதை தெளிவாகப் புரிஞ்சிருக்கு. காரணம், என்னுடைய கதாபாத்திரத்தை எழுதியது கதாசிரியர்தான்.
ஆனால், என்னுடைய கதாபாத்திரம் இன்ஸ்பிரேஷனாக இருக்குனு எனக்கு மெசேஜ் பண்ணி பாராட்டினாங்க.

இந்த சீரிஸில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எனக்கு பிரஷர் இல்லை.
ஆனா, கொஞ்சம் பயம் மட்டும் இருந்தது. எனக்கும் எங்க அம்மா கதாபாத்திரத்துக்கும் இடையில் இருக்கிற விஷயங்கள் தெரிய வந்ததும் சீரிஸ் இன்னும் பரபரப்பாகிடுச்சு.
முதல் சீசன்ல என்னென்ன விஷயங்கள் பார்த்தீங்களோ, அதெல்லாம் இந்த சீசனிலும் இருக்கும். மே 22-ம் தேதி பார்த்திடுங்க!" என உற்சாகத்துடன் பேசினார்.
மேலும், நடிகை அனுமோல் தொடர்பாக குழுவினர் அனைவரும் பேசுகையில், "மேம் கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கலாம்.
ரொம்பவே பணிவானவங்க. முக்கியமாக, அவங்க ஒரு காட்சிக்குத் தயாராகிற விதம் அனைவரும் கத்துக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு நாளில் 10 சீன் எடுத்தாலும் அவங்களுக்கு அதிகளவிலான வசனங்கள் இருக்கும்.
ஆனால், அனுமோல் மேம் அதையெல்லாம் எழுதி வைத்து வந்து நடிப்பாங்க. சீனியராக எங்களிடம் எல்லோரிடமும் ரொம்ப நட்போடு இருப்பாங்க.

முதல் சீசனோட கடைசி நாள் ஷூட்டிங் சமயத்தில் எங்களுக்கெல்லாம் மேம் ஒரு கிஃப்ட் கொடுத்தாங்க. அந்தளவுக்கு எங்கள்மேல் எல்லோர்மேலும் மேம் அக்கறைக் கொண்டிருப்பாங்க.
அவங்க ஏதாவது சாப்பாடு ஆர்டர் பண்ணினாலும் எங்களை எல்லோரையும் நினைவில் வைத்து கேட்டு எங்களுக்கு சேர்த்தே ஆர்டர் பண்ணுவாங்க.
அதுதான் அனுமோல் மேம்!" என அனைவரும் ஒவ்வொரு விஷயங்களை அடுக்கினார்கள்.
தமிழ் ஓ.டி.டி உலகில் தற்போது லாங் ஃபார்மெட் சீரிஸ்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. 'கனா காணும் காலங்கள்', 'உப்பு புளி காரம்', 'ஆபீஸ்', 'ஹார்ட் பீட்' என அடுத்தடுத்து சீரிஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இது யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு களமும் அமைத்துக் கொடுக்கிறது. இது தொடர்பாக பாடினி, "ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக நினைவுபடுத்துவதற்கு லாங் ஃபார்மெட் சீரிஸ் உதவியாக இருக்கும்.
இதில் கற்றுக்கொள்வதற்கான இடமும் அதிகமாகக் கிடைக்கும்," என்றவர், சமீபத்தில் இளையராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தார்.

அது பற்றி அவர், "நான் இப்போ 'திருக்குறள்'னு ஒரு படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். திருவள்ளுவரோட வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களை மையமாக வைத்து அந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது.
அந்தப் படத்துக்கு இளையராஜா சார்தான் இசையமைக்கிறார். அவரைச் சந்திக்கிறதுக்கு ஒரு நாள் போகணும்னு சொன்னதுமே எனக்கு அப்படியொரு சந்தோஷம். அவரை நேரில் பார்த்ததுமே நான் அழுதுட்டேன்.
அவர் என்னைக் கூப்பிட்டு, 'ஏன் மா அழுகுற?'னு கேட்டார். அதன் பிறகு, 'உன் கண்ணீர் தூய்மையாக இருக்கு'னு சொல்லி ஆசீர்வதிச்சு என்னை அனுப்பினார்.
இதுக்கு மேல் என்ன வேணும் எனக்கு!" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.