இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
Kerala: சுரேஷ்கோபி நடித்த சினிமா டைட்டில் மாற்றம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை; பட ரிலீஸ் எப்போது?
பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ்கோபி கதாநாயகனாக நடித்துள்ள சினிமா ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா. ஜே.எஸ்.கே என சுருக்கமாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த சினிமாவில் அனுபமா பரமேஸ்வரன், `ஜானகி' என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நீதிமன்றத்தில் அனல்பறக்கும் வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த சினிமாவில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கதாநாயகிக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் விதமாக சினிமாவின் கதை அமைந்துள்ளது. யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த சினிமா கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜானகி என்பது பெண் தெய்வமான சீதாவின் மற்றொரு பெயர் எனவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணின் பெயர் ஜானகி என இருப்பது சரியல்ல எனவும் சென்சார் போர்டு கருத்து தெரிவித்திருந்தது.
மேலும், சினிமா டைட்டிலிலும், கதாநாயகியின் கதாபாத்திரத்திரமாக ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என சென்சார்போர்டு கூறியிருந்தது. அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே ஜே.எஸ்.கே சினிமாவை வெளியிட அனுமதிக்க வேண்டும் என படக்குழுவினர் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையின்போது ரிவியூ கமிட்டி சினிமாவை பார்க்க உள்ளதாக சென்சார்போர்டு தெரிவித்திருந்தது.
ரிவியூ கமிட்டி சினிமாவை முழுமையாக பார்த்த பிறகும் ஜானகி என்ற பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்தது. பின்னர் நீதிபதிகள் சினிமாவை பார்த்தனர். ஐகோர்ட்டில் நேற்று காலை நடைபெற்ற விசாரணையின்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜானகி என்ற பெயரை மாற்றுவதில் சிரமம் உள்ளதாகவும். டீசர் உள்ளிட்ட அனைத்திலும் ஜானகி என வெளியிடப்பட்டுவிட்டதாகவும். இனி பெயரை மாற்றினால் பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பத்மாவத், பில்லு பி உள்ளிட்ட சினிமாக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்சார்போர்டு கோர்ட்டில் தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், பெயரிடுவதற்கு கலைத்துறையினருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது அல்லவா. எனவே, ஜானகி என்ற பெயர் வரும்போது, இது சரித்திர கதாபாத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லை என எழுத்துவடிவில் காண்பித்தால் போதாதா. ஏற்கெனவே பட்டாளம் ஜானகி என்ற மலையாள சினிமா முன்பு வெளிவந்துள்ளது எனவும் கோர்ட் தெரிவித்தது. சினிமா கதாபாத்திரத்தின் முழிபெயரான ஜானகி வித்யாதரன் என்றோ, ஜானகி வி என்றோ அல்லது வி ஜானகி என்றோ மாற்ற வேண்டும் என சென்சார்போர்டு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சினிமா பெயரை ஜானகி வி vs ஸ்டேட் ஆஃப் கேரளா எனவும், கதாபாத்திரத்தின் பெயரை வி ஜானகி எனவும் மாற்றுவதாகவும், சினிமா தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்ட அடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

இதுபற்றி இயக்குநர் பிரவீன் நாராயணன் கூறுகையில், "சினிமா குறித்த விவாதம் முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட சினிமா பதிப்பை விரைந்து சென்சார் போர்டுக்கு அனுப்பி வைப்போம். இரண்டு இடங்களில் மியூட் செய்யவேண்டும் என சென்சார்போர்டு தெரிவித்துள்ளது. அதில் சற்று வருத்தம்தான். சில காட்சிகளை நீக்க வேண்டும் என முதலில் கூறினார்கள். அந்த காட்சிகள் இந்த சினிமாவுக்கு மிகவும் முக்கியமானவை என்பதால் மாற்றமுடியாது என நாங்கள் உறுதியாக தெரிவித்தோம். அதற்கு தயாரிப்பாளர்களும் எங்களுடன் உறுதியாக இருந்தனர். வரும் 18-ம் தேதி சினிமாவை ரிலீஸ் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.