மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த ...
Kerala: ``இயக்குனர் ஷாபி மரணம்; மலையாள சினிமாவுக்கு பேரிழப்பு'' -முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்..
மலையாள சினிமா இயக்குனரும், கதாசிரியருமான ஷாபி என்ற எம்.ஹெச்.ரஷீத் தனது 57 வயதில் மரணமடைந்தார். மூளை அதிர்ச்சி காரணமாக கடந்த 16-ம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்டர் மெடிசிட்டியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. மேலும், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மதியம் சுமார் 12.25 மணியளவில் மரணமடைந்தார்.
அவருக்கு ஷாமிலா என்ற மனைவியும், அலீமா, சல்மா ஆகிய மகள்களும் உள்ளனர். இயக்குனர் ஷாபி-யின் உடல் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நடைபெற்றது. நடிகர் மம்முட்டி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களும் இயக்குநர் ஷாபி-யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மலையாள சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த மக்களுக்கு பிரியப்பட்ட இயக்குநரை இழந்துவிட்டோம். உதவி இயக்குனர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் ஷாபி. ரசிகர்களின் எண்ணத்தை புரிந்துகொண்டு கதாபாத்திரங்களையும், வசனங்களையும் உருவாக்கியவர். அவரது காமெடி கதாபாத்திரங்கள் மலையாளத்தை கடந்தும் வரவேற்பை பெற்றது. இளம் இயக்குனரான ஷாபியின் மறைவு மலையாள சினிமாவுக்கு பேரிழப்பு. ஷாபியின் குடும்பத்தினர் மற்றும் அவரிடம் அன்புகாட்டுபவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
1968-ம் ஆண்டு எர்ணாகுளம் புல்லேப்படி-யில் பிறந்தார். ராபி மெக்கார்ட் இயக்கிய சினிமாவில் 1990-ல் உதவி இயக்குனராக ஷாபி சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 2001-ம் ஆண்டு ஒன்மேன் ஷோ என்ற சினிமாவில் இயக்குநராக பணிபுரிந்தார். கடைசியா 2022-ம் ஆண்டு ஆனந்தம் பரமானந்தம் என்ற சினிமாவை இயக்கினார். மொத்தம் 18 சினிமாக்களை இயக்கியுள்ளார் ஷாபி. தனது சினிமாவை பார்த்துவிட்டுச் செல்லும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்கைவிட்டுச் செல்லவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் ஷாபி. அவர் சினிமாக்களின் நகைச்சுவை காட்சிகளை ரசிகர்கள் நினைத்து நினைத்து சிரிக்கும் அளவுக்கு காமெடியாக இயக்கியுள்ளார்.