Kisan Credit Card: விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு, ரூ.5 லட்சம் வரை கடன்! - விண்ணப்பிப்பது எப்படி?!
'மழை பேஞ்சாலும் சரி, வெயில் அடிச்சாலும் சரி விவசாயத்துல திடீர்னு ஒரு செலவு வருது... அங்க, இங்க போய் நிக்காம எளிதா கடன் கிடைக்குமா?' என்ற கேள்வி விவசாயிகளிடம் அதிகம் எழும். அந்தக் கேள்விக்கான பதில் 'கிசான் கிரெடிட் கார்டு'.
கடந்த சனிக்கிழமை தாக்கல் ஆன மத்திய பட்ஜெட்டில், கிசான் கிரெடி கார்டுகளின் குறுகிய கால கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
'இந்தக் கிரெடிட் கார்டை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...எப்படி விண்ணப்பிக்கலாம்' என்பதை தெரிந்துகொள்வோம். வாங்க...
யார் யார் பெறலாம்?
விவசாயிகள், கூட்டு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டுகளை பெறலாம். இந்தக் கிரெடிட் கார்டு மூலம் குறைந்தபட்சம் ரூ.5,000-மும், அதிகபட்சம் ரூ.5 லட்சமும் கடனாக பெற முடியும்.
வயது வரம்பு: 18 - 70.
எதற்கு பயன்படுத்தலாம்?
இந்தக் கிரெடிட் கார்டுகள் மூலம் பெறப்படும் தொகையை...
பயிர்களை பயிரிட;
அறுவடைக்கு பின்பான செலவுகளுக்கு;
பயிர்களை சந்தைப்படுத்த தேவையான காசு;
விவசாயிகளின் வீடுகளின் நுகர்வு தேவைக்கு;
விவசாயம் மற்றும் விவசாய நிலங்களுக்கு சம்பந்தமான பரமாரிப்பு செலவுகளுக்கு,
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த முதலீடுகளுக்கு
- போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம்.
எவ்வளவு பெற முடியும்?
முன்னர் கூறியதுப்போல, கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரூ.5 லட்சத்தையும் ஒரே தவணையில் மொத்தமாக வாங்கிவிட முடியாது. விவசாய நிலம், எப்படி விவசாயம் செய்யப்படுகிறது என்பது அடிப்படையில் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பணம் கடனாக பெறமுடியும் என்பதை நிர்ணயம் செய்துள்ளனர்.
எப்படி திருப்பி செலுத்த வேண்டும்?
பயிர் காலம் மற்றும் சந்தையிட தேவையான காலம் பொறுத்து கடன் திருப்பி செலுத்துவதற்கான காலம் அமையும்.
கால அளவு: 5 ஆண்டுகள்
வட்டி விகிதம் எப்படி?
ரூ.3 லட்சம் கடன் தொகை வரையில் ஆண்டுக்கு 7 சதவிகித வட்டி. மூன்று லட்சத்தை தாண்டும்போது, வட்டி விகிதங்கள் வேறுபடும்.
எப்படி பயன்படுத்தலாம்?
இந்தக் கிரெடிட் கார்டுகளை வைத்து ஏ.டி.எம்-களில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கார்டை பயன்படுத்தி டீலர்களிடம் இருந்து பொருள்கள் அல்லது சேவையை பெறலாம். மொபைல் பேங்கிங் வசதியும் இந்தக் கார்டுகளில் உண்டு.
எப்படி பெற வேண்டும்?
ஆன்லைனில்...
எந்த வங்கியில் கிரெடிட் கார்டு வாங்க விரும்புகிறோமோ, அந்த வங்கியின் வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்.
அதில் உள்ள 'கிசான் கிரெடிட் கார்டு' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர், 'Apply'-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு, கேட்கப்படும் தகவல்களை நிரப்பி 'Submit'-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், விண்ணப்பத்துடைய குறிப்பு எண் அனுப்பப்படும்.
கிரெடிட் கார்டு பெறுவதற்கு தகுதியானவராக நாம் இருந்தால், வங்கி நம்மை அடுத்து 3 - 4 வேலை நாள்களுக்குள் தொடர்பு கொள்ளும்.
இந்தக் கிரெடிட் கார்டை ஆப்லைனிலும் பெற முடியும். நமக்கு தோதான வங்கிக்கு சென்று, அங்கு விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுத்தால், அந்தக் கிரெடிட் கார்டை பெற நமக்கு தகுதி இருந்தால் வங்கியிடம் இருந்து அழைப்பு வரும்.