Kumbh Mela: புனித நீராட கும்பமேளாவில் குவிந்த 5 கோடி பக்தர்கள்; கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யஜ்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளாவின் பிரதான புனித நீராடல் நடைபெற்று வருகிறது. மெளனி அமாவாசையான இன்று நடைபெறும் இந்த புனித நீராடலுக்கு 'அம்ரித் ஸ்நான்' என்று சொல்வதுண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் விரதம் இருந்து திரிவேனி சங்கமத்தில் புனித நீராடுவது வழக்கம்.
இந்த முக்கியமான நாளில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் குவிந்துள்ளனர். இன்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். திரிவேணி சங்கமம் இருக்கும் இடத்தில் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு மக்கள் குவிந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளை மீறி பக்தர்கள் செல்ல ஆரம்பித்தனர்.
அதிகமான பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனே அருகில் உள்ள மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். தடுப்புகள் உடைக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மிதித்துச்செல்லும் நிலை ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 30 முதல் 40 பேர் வரை பக்தர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு குறித்த செய்தியை அரசு இன்னும் உறுதிபடுத்தவில்லை. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர். ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை தற்காலிக மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்ற வண்ணம் இருக்கின்றன.
அதிகமானோர் தங்களது உறவுகளை கூட்டத்தில் தவறவிட்டுவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். இன்றைய புனித நீராடலில் 10 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் உடனுக்குடன் புனித நீராடிவிட்டு சம்பவ இடத்தை காலி செய்யும்படி நிர்வாகம் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறது. கூட்ட நெரிசல் குறித்து கேள்விப்பட்டதும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அதோடு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தேவைப்படுபவர்களுக்கு தக்க மருத்துவ உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கர்நாடகாவில் இருந்து கும்பமேளாவிற்கு இரண்டு பஸ்களில் வந்திருக்கும் சரோஜினி என்பவர் கூட்ட நெரிசல் குறித்து கூறுகையில்,''நாங்கள் இரண்டு பஸ்களில் வந்திருக்கிறோம். நாங்கள் நண்பர்களுடன் 9 பேர் வந்திருக்கிறோம். கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதற்குள் நாங்கள் சிக்கிக்கொண்டோம். அதிகமானோர் கூட்டத்திற்குள் கீழே விழுந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தது''என்றார்.
பிரயக்ராஜ் நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று புனித நீராட ஏற்கெனவே 5 கோடி மக்கள் பிரயக்ராஜ் நகருக்கு வந்துவிட்டனர். மேலும் 5 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வரக்கூடிய மெளனி அமாவாசை 144 ஆண்டுக்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் அபூர்வமான ஒன்றாகும். எனவே இந்த தினத்தில் புனித நீராடுவது என்பது மிகவும் நல்லது ஆகும். மெளனி அமாவாசையான இன்று அதிகாலையில் நாகா சந்நியாசிகள் புனித நீராடுவதாக இருந்தது.
அவர்கள் புனித நீராடலுக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். அந்நேரம்தான் கூட்ட நெரிசல் குறித்த செய்தி வந்தது. இது குறித்து அகில பாரதிய அங்காரா பரிஷத் தலைவர் ரவீந்திர பூரி கூறுகையில்,''இன்று அதிகாலையில் சாதுக்களும், சந்நியாசிகளும் புனித நீராடலுக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். அந்நேரம் கூட்ட நெரிசல் குறித்த தகவல் வந்தது. இதனால் புனித நீராடல் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டோம். பக்தர்கள்திரிவேணி சங்கமத்திற்கு செல்லாமல் கங்கை ஆற்றில் நீராடிவிட்டு உடனுக்குள் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பவேண்டும்''என்று கேட்டுக்கொண்டார்.
இன்று 12 ஆயிரம் சந்நியாசிகள் நாகா சந்நியாசிகளாக மாறுகின்றனர். கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்காக 190 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. அதோடு கும்பமேளா நடைபெறும் இடத்தில் 1000 டாக்டர்கள் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs