அமித் ஷாவுடன் சி.வி.சண்முகம், நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை சந்திப்பு!
L2: Empuraan Review: தெளிவான அரசியல், அடிப்பொலி மோகன்லால்; ஆனாலும் சோதிக்கும் சேட்டன் சினிமா!
கேரள முதல்வர் பி.கே.ராமதாஸின் (சச்சின் கெடெக்கர்) மறைவிற்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி, மாநிலத்தில் போதைப் புழக்கத்தை அதிகரிக்க முயல்கிறார் அவரின் மருமகன் பாபி (விவேக் ஓபராய்).
அவரைக் கொன்று, இரண்டையும் ராமதாஸின் மகனான ஜத்தினிடம் (டொவினோ தாமஸ்) ஒப்படைத்துவிட்டு, ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) காணாமல் போவதாக முதல் பாகமான 'லூசிபர்' முடிவடையும்.
இந்நிலையில், நல்லாட்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜத்தின் ஊழலில் திளைக்கிறார். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடமிருந்து தப்பிக்க, பால்ராஜ் பஜ்ரங் (அபிமன்யு சிங்) தலைமையிலான மதவாதக் கட்சியோடு கைகோர்த்து, தன் சொந்தக் கட்சியிலிருந்தே விலகி, தனியாகக் கட்சி தொடங்குகிறார்.

இது கேரளத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எல்லோரும் அஞ்சுகிறார்கள். மறுபுறம், சர்வதேச அளவில் போதைக் கும்பல்களால் உலகளவிலும் பிரச்னைகள் எழ, இரண்டையும் சரி செய்ய, ஸ்டீபன் நெடும்பள்ளி எனும் குரேஷி அப்ராம் களமிறங்குகிறார்.
இதற்குப் பின் நடக்கும் ஆக்ஷன் செண்டை மேள ஆட்டமே ப்ரித்விராஜ் இயக்கியிருக்கும் 'எல் 2: எம்புரான்'.
ஆனால், எமோஷன் ஏரியாவில் லாலேட்டனுக்கான தீனி என்பது யானை பசிக்குப் பழம் பொரியாகச் சிறுத்து நிற்கிறது.
டெம்ப்ளேட் வில்லனாக மாறியிருக்க வேண்டிய கதாபாத்திரத்தைச் சின்ன சின்ன உடல்மொழியால், தனித்து நிற்க வைத்திருக்கிறார் டொவினோ தாமஸ்.
அரசியல் அவதார காட்சியில் தன் அனுபவத்தைப் பதிந்து, கவர்கிறார் மஞ்சு வாரியர். தொடக்கத்தில் வெறுப்பைச் சம்பாதிக்கும் அபிமன்யு சிங், இரண்டாம் பாதியில் வழக்கமான கத்தல்களோடு நின்றுவிடுகிறார்.

ப்ரித்விராஜின் ஆக்ஷன் பங்களிப்பில் குறையில்லை. சுகந்த் கோயல், இந்திரஜித் சுகுமாரன், ஃபாசில், சுராஜ் வெஞ்ஞாரமூடு, கிஷோர், பைஜு சந்தோஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து, வட இந்தியா, கேரளா என மாறிக்கொண்டே இருக்கும் நில அமைப்புகளுக்குத் தேவையான ஒளியமைப்பைத் தந்ததோடு, ஆக்ஷன், பொதுக்கூட்டம் போன்றவற்றில் பிரமாண்டத்தை 'Anamorphic' வடிவத்தில் திரைக்குக் கடத்தி பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ்.
தன் பங்கிற்கு ஆக்ஷனின் காட்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன். ஆனாலும், குமுளி செக்போஸ்ட்டைத் தாண்டி கம்பம் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நீளும் சில ஆக்ஷன் காட்சிகளை இழுத்துக்கட்டத் தவறுவதால், 'வேகமெடுக்கு சேட்டா' என கமென்ட் அடிக்கத் தோன்றுகிறது.
பிரமாண்ட காட்சிகள் மட்டுமல்லாது, எல்லா காட்சிகளையும் தன் அட்டகாசமான பின்னணி இசையால் மெருகேற்றியிருக்கிறார் தீபக் தேவ். ஸ்டன்ட் சில்வாவின் அட்டகாசமான ஆக்ஷன் வடிவமைப்பு, படத்திற்கு முதுகெலும்பு.
2002-ம் ஆண்டு நடப்பதாகக் காட்டப்படும் மதக் கலவரம், அதனால் வன்முறைக்கும் படுகொலைக்கும் ஆளாகும் இஸ்லாமியர்கள், அதை அரங்கேற்றியவர்கள் அரசியல் தலைவர்களாக மாறி நிற்பது, அவர்கள் கேரளாவைக் குறிவைப்பது என நிதானமாகவும் அழுத்தமாகவும் கதையின் ஆன்மாவைப் பேசத் தொடங்குகிறது திரைக்கதை.

இடையிடையே சர்வதேச போதைப் பொருள் அரசியலையும் பேசுகிறது. இரண்டும் எப்போது ஸ்டீபன் நெடும்பள்ளி வருவார் என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்து, அதற்கேற்ற நேரத்தில் மோகன்லாலின் அறிமுகம் வருகிறது.
கொள்கை அரசியலையும் கேரளத்தின் கள அரசியலையும், வீரியமாகப் பேசுவதோடு, மத அரசியலின் அபாயத்தையும் ஆழமாக விவாதிக்கிறது படம். ஆனால், அதற்குப் பிறகு கதை தேங்கிவிடுவதுதான் சிக்கல்!
மோகன்லாலின் எல்லா காட்சிகளையும் ஓப்பனிங் சீன் போலவே ஸ்லோ-மோவில் இழுப்பது, 15 நிமிடத்திற்கு ஒரு ஆக்ஷன் காட்சியை வைப்பது, மோகன்லாலின் பின்புலம் சம்பந்தமாக அதீத பில்டப் வசனங்களைக் கொட்டுவது எனச் சில அயற்சிகள் எட்டிப் பார்க்கின்றன.
மோகன்லாலில் இருப்பு, அவரின் சில மைண்ட் கேம் காட்சிகள், லாஜிக் ஓட்டைகளைச் சில சுவாரஸ்யங்களால் அடைத்தவிதம் போன்றவற்றால் மட்டுமே முதற்பாதி தப்பிக்கிறது.
இரண்டாம் பாதியிலும் இந்த அதீத ஆக்ஷன் பூரம் நீள்கிறது. முதற்பாதியில் மதவாத அரசியலைத் தோலுரித்து வில்லனாக்கிய திரைக்கதை, இரண்டாம் பாதியில் அதன் அரசியலை விடுத்து, தலைவரை மட்டுமே துரத்துகிறது.

மேலும், டிராமாவாக திரைக்கதையை நகர்த்தாமல், வெறும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பில்டப்களால் மட்டுமே படத்தை நகர்த்த முயன்றிருப்பது ஏமாற்றமே!
இவை தொழில்நுட்ப ரீதியாக ஒரு நல்ல திரையனுபவத்தைக் கொடுத்தாலும், சிறிது நேரத்தில் அயற்சியையும் சேர்த்தே கொடுக்கின்றன. மோகன்லாலின் கதாபாத்திரம் ஆழமாகவும் அழுத்தமாகவும் எழுதப்படாதது பெரிய மைன்ஸ்.
மற்றொரு பக்கம், மோகன்லாலின் 'வாடா' மொமண்ட், அவரின் மேனரிஸம், லூசிபர் ரெபரென்ஸ், க்ளைமாக்ஸ் பின்கதை சர்ப்ரைஸ் எனப் பல மொமன்ட்கள் க்ளிக் ஆகி ஆறுதல் தருகின்றன. அதேபோல இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தனியே உரையாடிக் கொள்ளும் அந்தக் காட்சி, அட்டகாசமான நையாண்டி அரசியல்!

மதமும் அரசியலும் சேர்வது, திரியும் நெருப்பும் சேர்வது போன்றது என்ற அரசியலைச் சமரசமின்றி பேசிய விதத்தில் பாராட்ட வைத்தாலும், ஆக்ஷனையும், தொழில்நுட்பத்தையும் மட்டுமே நம்பி களமிறங்கியதால், ''அடிபொழியானு சேட்டா..." எனச் சொல்ல முடியாமல், "ஆவரேஜானு சாரே..." என்றே சொல்ல வைக்கிறது 'எல் 2: எம்புரான்'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...