2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்
Malayalam Cinema: ரூ.700 கோடி நஷ்டம்; 170+ படங்கள் தோல்வி; சிக்கல்களைத் தீர்க்குமா வேலை நிறுத்தம்?
மலையாள திரைத்துறை முக்கிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. சினிமா தயாரிப்பில் ஈடுபடும் முக்கிய அமைப்புகள் கோரும் அவசர சீரமைப்புகள் உடனடியாக செய்யப்படாவிட்டால் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கண்காட்சியை ஜூன் 1-ம் தேதி முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
சினிமா தயாரிப்பின் பட்ஜெட் அதிகப்படியாக உயர்ந்ததால் சில மாதங்கள் நீடித்த நிதி நெருக்கடிக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-09-16/ibo5huft/Newssense-article-72.png)
நடிகர்களுக்கான சம்பளம் உயர்ந்ததும், வரிகள் உயர்ந்ததும் இதில் முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன. திரைப்பட தயாரிப்பாளர் ஜி.சுரேஷ் குமார் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (KFPA), கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFKA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடி இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.
நஷ்டத்தில் Malayalam Cinema
மலையாள திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த படைப்புகளை உருவாக்கி வருகிறது. ஆனால் திரையரங்குகளில் இந்த படங்கள் வசூல் ரீதியான வெற்றியைப் பெறுகின்றனவா என்பது கேள்விக்குறிதான். கடந்த 2024-ம் ஆண்டு மஞ்சுமேல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம், ஏ.ஆர்.எம் போன்ற சில படங்கள்தான் வெற்றிபெற்றன. பல திரைப்படங்கள் வசூலில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
திரைத்துறையினர் என்ன முயற்ச்சிகளை மேற்கொண்டாலும் சில படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுகின்றன. கடந்த ஆண்டு வெளியான 200 படங்களில் 24 படங்கள் மட்டுமே வசூல்ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளன. மற்றவை நஷ்டமடைந்துள்ளன. மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் கடந்த ஆண்டு 600 முதல் 700 கோடி ரூபாய் நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர்கள் சம்பளம்
டைம்ஸ் ஆப் இந்தியா தளம் கூறுவதன்படி, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் சம்பளத் தொகையை தயாரிப்பாளர்களால் ஈடு செய்ய முடியவில்லை.
கேரள திரைப்பட வர்த்தக சபை நிர்வாகக்குழு உறுப்பினரான சுரேஷ் குமார், "ஒரு படத்தின் ஒட்டுமொத்த செலவில் 60% நடிகர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. வளர்ந்துவரும் நடிகர்கள் கூட அதிக சம்பளம் கேட்கின்றனர். இது மலையாள சினிமா வசதிகளுக்கு அப்பாற்பட்டது." எனக் குற்றம் சாட்டுகிறார்.
வரி
மேலும் தயாரிப்பாளர்கள் வரி அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே வரி' திட்டப்படி, பொழுதுபோக்கு வரி ஜி.எஸ்.டி கீழ் வருவதனால் திரைப்படங்களிலிருந்து வருமானத்தில் 30% வரி கட்ட வேண்டியுள்ளது.
100 கோடி சம்பாதிக்கும் ஒவ்வொரு படத்திலும் 30 கோடி அரசால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு 27 கோடி மட்டுமே கிடைக்கிறது. இது மலையாள சினிமாவின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது எனக் கூறுகின்றனர்.
இதற்கு முன்னதாக நடிகர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த மாற்றமும் ஏற்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.
OTT தளங்கள்
நிதி நெருக்கடியில் இருந்து தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க ஓடிடி தளங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்பட்டாலும், அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன.
ஓடிடி தளங்கள் தியேட்டர்களில் சிறப்பாக ஓடிய படங்களையே வாங்க விரும்புவதால், பெரும்பாலான படங்களை அவர்கள் கூறும் விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. ஓடிடி தளங்களின் தயவில் தயாரிப்பாளர்கள் விடப்படுகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/1qm8z7mo/Screenshot-2025-02-12-195208.png)
போராட்டம், வேலை நிறுத்தம், முறையீடு
தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறை அமைப்புகள் எடுத்துள்ள முடிவின்படி, ஜூன் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு முதல் திரையிடல்கள் வரை அனைத்தும் நிறுத்தப்படும். அதற்கு முன்பாக இதுகுறித்து கவன ஈர்ப்பு செய்யும் வகையில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு திரைத்துறையின் அவலநிலையை எடுத்துரைக்கும் போராட்டம் நடைபெறும்.
திரைத்துறையினர் தங்களது கவலைகளையும் சாத்தியமான தீர்வுகளையும் கேரள முதல்வரிடம் முறையிடவும் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவின் திரைப்பட கலாச்சாரத்தின் முக்கிய பங்குதாரராக இருக்கும், மலையாள சினிமாவுக்கு இந்த நடவடிக்கைகள் நம்பிக்கையளிக்குமா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.