PBKS vs KKR: "பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன்" - தோல்வி குறித்து ரஹானே
சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 8 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 62 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், பஞ்சாப் பவுலர்களின் அசாத்திய பந்துவீச்சில் நிலைகுலைந்த கொல்கத்தா, அடுத்த 33 ரன்களுக்கு மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் சாதனை வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
தோல்விக்குப் பிறகு பேசிய ரஹானே. "இதில் விளக்குவதற்கு எதுவுமில்லை. என்ன நடந்தது என்பதை எல்லோருமே பார்த்தோம். பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன். தவறான ஷாட் அடித்தேன். அதுவுமே விக்கெட் மிஸ்ஸிங்தான் (எல்.பி.டபிள்யு அவுட் ஆன விதம்). அவர் (ரகுவன்ஷி) உறுதியாக இல்லை. அது நடுவரின் அழைப்பாக இருக்கலாம் என்று கூறினார். நான் உறுதியாக இல்லாததால், அந்த நேரத்தில் ரிவ்யூ எடுக்க விரும்பவில்லை. ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தோம். தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்கிறோம். இந்த பிட்ச்சில் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர். பஞ்சாப்பை 111 ரன்களில் சுருட்டினர்.

ஒரு தனிநபராக நம்பிக்கையுடன், நேர்மறையுடனும் இருக்க வேண்டும். ஸ்வீப் ஷாட் ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது. இன்டெண்ட்டுடன் செல்லுங்கள் ஆனால் கிரிக்கெட்டிங் ஷாட் ஆடுங்கள். நாங்கள் பொறுப்பில்லாமல் இருந்தால், நாங்கள்தான் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் என் தலைக்குள் பல்வேறு விஷயங்கள் ஓடுகிறது. நான் இப்போது அமைதியாக, எங்கள் வீரர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று நான் யோசிக்க வேண்டும். நேர்மையாக இருக்கவேண்டும். இன்னும் பாதி போட்டிகள் இருப்பதால், தொடர்ந்து முன்னேற வேண்டும்" என்றார்.