PMK: செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மகள் காந்திமதிக்கு பதவியா? - ராமதாஸ் சொன்ன பதில்
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமதாஸ் தலைமையில் நேற்று முன்தினம் (ஜுலை 8) செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, எம்எல்ஏ அருள், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியும் கலந்துகொண்டிருந்தார். குறிப்பாக செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அவர் அரசியலுக்கு அழைத்து வரப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று ( ஜூலை 10) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் உங்களின் மூத்த மகள் காந்திமதிக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ், "கடந்தக் காலங்களிலும் பாமக கூட்டங்களில் மகள் காந்திமதி கலந்துகொண்டிருக்கிறார். தற்சமயம் வரை அவருக்கு எந்த ஒரு பதவியும் கொடுக்கவில்லை. போகப்போக தெரியும்" என்று பாட்டுப் பாடி பதிலளித்திருக்கிறார்.