Rain: ``இதுவரை எந்த பிரச்னையும் இல்லை; வந்தாலும் சமாளித்துக்கொள்வோம்!'' - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை ஃபெஞ்சல் புயல் நெருங்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "2, 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்திருக்கிறது.
அதனை முன்னிட்டு, மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தோம். பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.சென்னையை பொறுத்தவரை தண்ணீர் தேங்க கூடிய இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏதேனும் இருந்தாலும் அதனை சமாளித்துக்கொள்வோம் " என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார்.