Rain Alert: சென்னையில் எத்தனை நாள்களுக்கு மழை நீடிக்கும்... எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும்? | Live
தனியார் வானிலை ஆர்வலர் சொல்வதென்ன?!
சென்னையில் மீண்டும் மழைப் பொழிவு தொடங்கியிருக்கிறது. அடுத்த 4-5 நாட்களுக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை விட டெல்டா மாவட்டங்களில் அதிக மழை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்.
எக்ஸ் தளத்தில் அவர் கூறுவதன்படி, ``காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது இலங்கைக்கு தெற்கே மையம் கொண்டுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் மேற்கு மற்றும் வடமேற்க்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரவிருக்கிறது. மிகவும் மெதுவாக நகர்வதனால் தமிழகத்தின் அருகாமையை அடைய 4 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
வடகிழக்கு பருவமழையின் அதிகபட்ச மழைப்பொழிவு
சென்னை மற்றும் KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை) உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை இருக்கும். ஆனால் 27-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தொடர்ச்சியான மழையை எதிர்பார்க்கலாம். சில நேரங்களை கன மழை, அதிகன மழையும் பெய்யக்கூடும். இதுதான் இந்த வடகிழக்கு பருவமழையின் அதிகபட்ச மழைப்பொழிவாக இருக்கும்’ என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தைப் பொருத்தவரையில், ராமநாதபுரம் நிச்சயம் மழைப்பொழிவை எதிர்கொள்ளும் என்றும் அதற்கு தென்பகுதி மாவட்டங்களில் மழை பெய்வது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளார். உள் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்காது என்றும் தெரித்துள்ளார்.
டெல்டாவுக்கு ரெட் அலர்ட்?
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் அதிக மழையைப் பெறுவது டெல்டா பகுதிதான் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.
நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களுடன் கடலூரிலும் மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம். இன்று அல்லது நாளை ரெட் அலர்ட் விடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னை வானிலைமையம் இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் தென்காசி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறியுள்ளது.