பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!
Retro நாயகிகள் 02: `எனக்கு மரியாதை தெரியாதா? சினிமாவை விட்டே போயிடுறேன்’ - சுஜாதா பர்சனல்ஸ்
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு நடிப்புல பிச்சு உதறுன நடிகை சுஜாதா பத்தி தான் தெரிஞ்சுக்கப்போறீங்க.

விஜயலட்சுமியோட பூர்வீகம் கேரளாவா இருந்தாலும் அவங்க பிறந்து, வளர்ந்தது யாழ்ப்பாணத்துல. யெஸ், நடிகை சுஜாதாவோட நிஜப்பெயர் விஜயலட்சுமி. சுஜாதாவோட அப்பா சங்கர மேனன் விலங்கியல் புரொஃபசர். அம்மா சரஸ்வதி குடும்பத்தலைவி. 1950-கள்ல இந்தியாவுல இருந்து பல ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்துல இருக்கிற கல்லூரிகள்ல வேலைபார்க்கப் போயிருக்காங்க. அப்படிப் போயிருந்தப்போ தான் சுஜாதா பிறந்திருக்காங்க. பத்தாவது வரைக்கும் சுஜாதா யாழ்ப்பாணத்துலதான் படிச்சிருக்காங்க.
சுஜாதா ஒன்பது மாசக் குழந்தையா இருந்தப்போ, கொழு கொழு குழந்தைக்கான விளம்பரப்போட்டி ஒண்ணுல அவங்கம்மா கலந்துக்க வெச்சிருக்காங்க. முதல் பரிசு, வேற யாருக்கு கிடைச்சிருக்கும்? குழந்தை சுஜாதாவுக்குத்தான். அதுக்குப் பிறகு ஒரு சிங்களப் படத்தயாரிப்பாளர் தன்னோட படத்துல குழந்தை சுஜாதாவை நடிக்க வைக்கணும்னு கேட்க, சுஜாதாவோட அப்பா ’அதெல்லாம் முடியவே முடியாது’ன்னு மறுத்திருக்காரு. இந்த இடத்துல சுஜாதாவோட அப்பா பத்தி சொல்லியே ஆகணும்.

’’எங்க அப்பாவுக்கு பாட்டு, டான்ஸ், சினிமான்னா பிடிக்கவே பிடிக்காது. வீட்ல ரேடியோவுல பாட்டுக்கூட வைக்க விட மாட்டார். சினிமாவுக்கும் கூட்டிட்டுப்போக மாட்டார். அவருக்கு நல்லா படிக்கிறவங்களை மட்டும்தான் பிடிக்கும், ஆனா, நானோ படிப்புல அந்த அளவுக்கு கெட்டிக்காரியெல்லாம் கிடையாது. அப்பா ரிட்டயர்டு ஆனதும் நாங்க கேரளாவுக்கே திரும்பிட்டோம். அதுக்கப்புறம்தான் நான் மலையாள சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சேன்.
சினிமான்னு சொன்னாலே வெறுக்கிற அப்பாவுக்கு மகளா பொறந்துட்டு, நான் நடிகையானதுக்குக் காரணம் என்னோட அண்ணன் கோபிநாத். அவருக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆசை. ஆனா, அவருக்கு போலியோ அட்டாக் வந்ததால, அவரோட சினிமா ஆசை நிராசை ஆயிடுச்சு. அதனால, அவரோட சினிமா ஆசையை என்னை நடிகையாக்கி பூர்த்தி செஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டார். அதுக்கான எல்லா முயற்சிகளையும் செஞ்சவர் அண்ணன்தான். அதுக்குப் பலனும் கிடைச்சது. ஆனா, எனக்கோ நடிகையாகணும்னு கொஞ்சம்கூட ஆசையில்ல. என் அண்ணனோட ஆசைக்காகத்தான் மலையாளப்படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.
என்னோட முதல் படம் தபஸ்வினி. ஒரு விதவை தங்கை கேரக்டர்ல நடிச்சேன். முதல் படமே ரொம்ப சோகமான கேரக்டர். அதுக்கப்புறம் நான் நடிச்ச 40 மலையாளப்படங்கள்லேயும் அநேகமா நான் சோகமான கேரக்டர்கள்லதான் நடிச்சேன். 1974-ல வெளிவந்த என்னோட முதல் தமிழ்ப்படமான ’அவள் ஒரு தொடர்கதை’யிலும் ஒரு சோகமான கேரக்டர்தான் எனக்குக் கிடைச்சிது.’’
- ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் ரிலீஸ் ஆனப்போ நடிகை சுஜாதா, ஆனந்த விகடனுக்கு கொடுத்த இன்டர்வியூவுல இதையெல்லாத்தையும் ஷேர் பண்ணியிருக்காங்க.

சுஜாதா மலையாளத்துல நடிச்சுக்கிட்டிருந்தப்போ தமிழ்ல நடிச்சா கே.பாலச்சந்தர் படத்துலதான் நடிக்கணும்னு ஆசைப்பட்டாராம். அவங்க ஆசைப்பட்ட மாதிரியே வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா, அவள் ஒரு தொடர்கதையில கே.பி. தன்னை நடிக்க வைக்க மாட்டார்னு சுஜாதா கன்ஃபார்மா நம்பினாங்களாம். இதுக்கான காரணத்தையும் அதே இன்டர்வியூவுல சொல்லியிருக்காங்க.
’’என்னோட பேச்சுல மலையாள வாடை அதிகமா இருக்கும். முதல் முறை பாலச்சந்தர் சார் என்னைப் பார்த்தப்போகூட, ‘உங்களோட தமிழ் உச்சரிப்பு சரியா இல்லை’ன்னுதான் சொன்னார். அதுக்காக என்னை தினமும் தமிழ் பேப்பரை உரக்க படிக்கும்படி சொன்னார் ஆனா, எனக்கு இந்தப்படத்துல நமக்கு வாய்ப்பு கிடைக்காதுன்னு தோணிடுச்சு. அதனால, கே.பி. சார் சொன்ன மாதிரி நான் பேப்பர்லாம் படிக்கவே இல்ல. ஆனா, நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அந்த சம்பவம் ஒரு மாசம் கழிச்சு நடந்துச்சு.
கே.பி. சார் என்னை ’அவள் ஒரு தொடர்கதை’யில கவிதா கேரக்டர்ல ஒப்பந்தம் செஞ்சார். ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பா இருக்கேன்னு எனக்கு டப் பண்ணாங்க. ரெண்டாவது ஷெட்யூல நான் சரளமா தமிழ்ப்பேச ஆரம்பிச்சேன். நான் பேசின தமிழைப்பார்த்து கே.பி. சார் ’யார்கிட்டயாவது தமிழ் கத்துக்கிட்டியா’ன்னு கேட்டு ஆச்சரியப்பட்டார்.

தவிர, ‘இந்தப் படத்துல உனக்கு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கேன். இனிமே மத்தப் படங்கள்ல நடிக்கிறதுக்கு முன்னாடி படத்தோட கதை என்ன, உன்னோட கேரக்டர் என்னன்னு கேட்டுட்டு நடி’ன்னு சொன்னார். அத நானும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன் நடிக்கிறதுக்கு ஸ்கோப் இருக்கிற படங்களா பார்த்துதான் செலக்ட் பண்றேன். கவர்ச்சியில எனக்கு சுத்தமா நம்பிக்கையில்ல. ஆனா, நிறைய பேர் மலையாளத்துல நான் கவர்ச்சியா நடிச்சேன்னு சொல்றாங்க. நான் அங்க நடிச்சது எல்லாம் அழவுற கேரக்டர்ஸ்தாங்க. அதுல எங்க கவர்ச்சியா நடிக்கிறது? ஒண்ணு, ரெண்டு படங்கள்ல பேண்ட் போட்டு நடிச்சிருக்கேன், அவ்வளவுதான்’’ என்கிறார் நடிகை சுஜாதா.
அவள் ஒரு தொடர்கதை வெற்றிக்குப்பிறகு சுஜாதாவோட சினிமா கிராஃப் மேலே இன்னும் மேலேன்னு வளர்ந்துகிட்டே போச்சு. அதுல அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, சந்திப்பு, தீர்ப்பு, திருப்பம், நூல்வேலி, பூந்தளிர், மயங்குகிறாள் ஒரு மாது, விதி என ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமான கேரக்டர்கள்ல சுஜாதா வாழ்ந்திருப்பாங்க. சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், ரஜினி, கமல்னு கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்கள் கூடவும் நடிச்சிருக்காங்க சுஜாதா.

’அன்னக்கிளி’யில காதலை விட்டுக் கொடுக்கிற கிராமத்து அனாதை பொண்ணு கேரக்டர்.
’அவர்கள்’ படத்துல சைக்கோ கணவன்கிட்ட சிக்கித் தவிக்கிற கேரக்டர்.
’அந்தமான் காதலி’யிலே நடை, உடை, பாவனை எல்லாத்துலயும் அந்தமான் பெண்ணாவே மாறியிருப்பார் சுஜாதா.
’நூல்வேலி’யில தான் மகளாக நினைத்த பெண்ணோட தப்பா பழகுற கணவனுக்கு மனைவியா, ஓர் எழுத்தாளரா நடிச்சிருப்பாங்க.
’பூந்தளிர்’ல கேன்சர்ல இறந்து போற இளம் அம்மா கேரக்டர்.
’விதி’ படத்துல காதல் என்ற பெயரை சொல்லி ஏமாத்துற ஆண்களுக்கு எதிரான வக்கீல் கேரக்டர்ல தீயா நடிச்சிருப்பாங்க சுஜாதா.
ஆரம்பத்துல இருந்தே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிச்சதால, கிட்டத்தட்ட சுஜாதா நடிச்ச எல்லா கேரக்டர்களையுமே நம்மால கொண்டாட முடியும்னுதான் சொல்லணும்.
21 வயசுலதான் சுஜாதா நடிக்க ஆரம்பிச்சாங்க. அவள் தொடர்கதையில நடிக்கிறப்போ அவங்களுக்கு 24 வயசு. அதனாலோ என்னவோ, அந்தக் காலத்து வழக்கப்படி ரொம்ப சீக்கிரமே அம்மா கேரக்டர்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ’ஆலய தீபம்’, ’உன்னை நான் சந்தித்தேன்’னு அம்மா ரோல் பண்ண ஆரம்பிச்சவங்க, ’கடல் மீன்கள்’, ’உழைப்பாளி’ போன்ற படங்கள்ல அவங்க ஜோடியா நடிச்ச கமல், ரஜினிக்கே அம்மாவா நடிச்சிருப்பாங்க.
அருள், அவள் வருவாளா, அமைதிப்படை, வில்லன், வரலாறு என பல படங்கள்ல அம்மா கேரக்டர்ல நடிச்ச சுஜாதாவோட கடைசி படம் வரலாறு. இதுல நடிகர் அஜித்துக்கு அம்மாவா நடிச்சி இருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தின்னு நூறு படங்களுக்கும் மேல நடிச்சிருக்காங்க சுஜாதா.

மத்தவங்களுக்கு சுஜாதா சரியா மரியாதை கொடுக்கறது இல்ல; வணக்கம்கூட சொல்றதில்லைன்னு ஒரு கான்ட்ராவர்ஸி அவங்க கரியர் உச்சத்துல இருந்தப்போ இருந்துச்சு. அதுக்கான விளக்கத்தையும் சுஜாதாவே ஆனந்த விகடன் இன்டர்வ்வியூவுல சொல்லி இருக்காங்க.
’’எல்லார் வீடு மாதிரியும் என் வீட்டுலேயும் பல பிரச்னைகள் இருக்கு. ஷூட்டிங் இடைவேளை அப்போ அதெல்லாம்தான் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும். அப்படி நான் யோசிச்சுகிட்டே இருக்கிறப்போ யாராவது பக்கத்துல வந்தா வணக்கம் சொல்லக்கூட மறந்திடுவேன். இத தான் சிலர், எனக்கு மரியாதை தெரியலன்னு தப்பா புரிஞ்சுக்கிறாங்க. அதனால, கல்யாணம் செஞ்சுக்கிட்டு கூடிய சீக்கிரம் சினிமாவை விட்டு விலகிட போறேன்’’னு அந்தப் பேட்டியில வருத்தப்பட்டிருப்பாங்க சுஜாதா.

கணவர் ரொம்ப கொடுமைக்காரரா?
சுஜாதாவோட திருமண வாழ்க்கையில நிறைய முன்னுக்கு பின்னான தகவல்கள் உண்டு. காதல் கல்யாணம், கணவர் ஜெயகர் கையில வச்சு தாங்குறார், ஒரு பையன் ஒரு பொண்ணுன்னு சந்தோஷமா இருக்காங்க சுஜாதா. பொண்ணு டாக்டர், பையனுக்குத்தான் கொஞ்சம் உடம்பு முடியல. அதனாலதான், அவங்க வீட்டிலேயே இருக்கிறாங்கன்னும் ஒரு தகவல் உண்டு. கணவர் ரொம்ப கொடுமைக்காரர், பணம் பணம்னு சுஜாதாவை அம்மா கேரக்டர்கள்ல நடிக்க சொன்னதே அவர்தான் அப்படிங்கற ஒரு தகவலும் இங்க இருக்கு. சுஜாதாவோட பர்சனல் வாழ்க்கையை தள்ளி வச்சிட்டு அவங்களோட நடிப்பை மட்டும் பார்த்தா, இன்னிக்கு வரைக்கும் சுஜாதாவோட இடம் காலியாவேதான் இருக்கு.
2011-ல இதய நோய் காரணமா வெகு சீக்கிரமே மரணம் அடைஞ்ச நடிகை சுஜாதா, என்னிக்கும் நம்ம இதயங்கள்ல வாழ்ந்துக்கிட்டுதான் இருப்பாங்க. அதுல எந்த சந்தேகமும் இல்லை.!