Sai Sudharsan : 'அந்த 2 விஷயத்தை இன்னும் கத்துக்கணும்!' - ஆட்டநாயகன் சாய் சுதர்சன்
'ஆட்டநாயகன் சாய் சுதர்சன்!'
டெல்லிக்கு எதிரான போட்டியை குஜராத் அணி வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் சார்பில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு சாய் சுதர்சன் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

'நான் இன்னும் கத்துக்கணும்!'
சாய் சுதர்சன் பேசியதாவது, 'அணிக்காக கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுப்பது கூடுதல் மகிழ்ச்சிதான். கடந்த சில போட்டிகளில் நான் அதை செய்யத் தவறியிருந்தேன். போட்டிகள் இல்லாத கடந்த வாரத்தில் இந்த விஷயத்தை சரி செய்ய வேண்டும் என்று சில பயிற்சிகளை செய்திருந்தேன்.
கில்லுக்கும் எனக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் நன்றாக Complement செய்துகொள்கிறோம். நான் எதாவது தவறாக ஆடினால் அவர் உடனே வந்து அதை எடுத்துக் கூறுவார். இந்தப் போட்டியை பொறுத்தவரைக்கும் பவர்ப்ளேயில் நாங்கள் நன்றாக ஆடினோம். 7-10 ஓவர்களில் கொஞ்சம் தடுமாறினோம். அவர்கள் நன்றாகவே பந்துவீசினார்கள்.

மொமண்டம் மாறுவது போல இருந்தது. ஆனால், நாங்கள் மீண்டு வந்துவிட்டோம். ஸ்பின்னர்களை இன்னும் சீராக எதிர்கொள்ள பயிற்சி செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதேமாதிரி, 15 வது ஓவருக்குப் பிறகும் எப்படி ஆட வேண்டும் என்பதில் நான் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது.' என்றார்.