Salt: `தினசரி சாப்பிடும் உப்பால் ஆண்டுதோறும் 1.9 மில்லியன் இறப்புகள்..!' - WHO அதிர்ச்சி தகவல்!
அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் ஆண்டுதோறும் 1.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக WHO தெரிவித்துள்ளது. சோடியம் நிறைந்த நுகர்வுகளை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உப்புக்கு மாற உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாகவும் WHO தெரிவிக்கிறது.
சமையலில் எல்லா உணவுகளுக்கும் கண்டிப்பாக சேர்க்கக்கூடிய பொருள் என்றால் அது உப்புதான். தவிர்க்க முடியாத உணவுப்பொருளும் உப்பு தான். தவிர்க்க வேண்டிய உணவுப் பொருளும் இதுதான். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி அதிகப்படியான உப்பு உட்கொள்ளுதல் விளைவாக, உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.9 மில்லியன் இறப்புகள் ஏற்படுகிறது.
சுகாதார நிபுணர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கைக்குப் பிறகும் பலர், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக சோடியத்தை உட்கொள்கிறார்கள். அதிக உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றிற்கு வழிவகுப்பதாக WHO தெரிவிக்கிறது. இதற்கு ஒரு தீர்வாக பொட்டாசியம் நிறைந்த உப்பை மக்கள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

WHO சொல்வதென்ன?
மனிதனின் உடலுக்கு உப்பு அவசியம் என்றாலும், அதனை அளவுக்கு அதிகமாக மக்கள் உட்கொள்கின்றனர். தினசரி 2 கிராம் சோடியம் உட்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 4.3 கிராமுக்கு மேல் உட்கொள்கிறார்கள். 2013 ஆம் ஆண்டில் WHO உறுப்பு நாடுகள் 2025க்குள் மக்கள் சோடியம் உட்கொள்ளலை 30 சதவீதம் குறைப்பதாக உறுதியளித்தன. ஆனால் ஆஸ்திரேலியா போன்ற பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கை அடைய வாய்ப்பில்லை. எனவே இந்த இலக்கு தற்போது 2030 ஆம் ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
WHO வழிகாட்டுதல்
மக்கள் பொட்டாசியம் நிறைந்த உப்புக்கு மாற பரிந்துரைக்கப்படுகிறது.
தினசரி 3.5 கிராம் பொட்டாசியம் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த மாற்றம் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய நோய், பக்கவாதம் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.