5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியு...
Shardul Thakur : 'ஐ.பி.எல் இல் Unsold; ரஞ்சியில் அசத்தல் ஆட்டம்!' - கலக்கும் ஷர்துல் தாகூர்
ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் ரஞ்சி போட்டியில் கலக்கி வருகிறார். இக்கட்டான சூழலில் மும்பை அணி தவித்து வந்த சமயத்தில் முதல் இன்னிங்ஸில் அரைசதத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தையும் அடித்து அணியை காப்பாற்றியிருக்கிறார் ஷர்துல் தாகூர். சிறப்பாக ஆடி வரும் ஷர்துல் தாகூர் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் Unsold ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சிக் கோப்பைத் தொடரின் 6 வது சுற்றுப் போட்டிகள் தொடங்கியிருக்கிறது. இந்திய அணியின் ஸ்டார் வீரர்களும் இந்தத் தொடரில் கலந்துகொள்வதால் வழக்கத்தை விட இந்தச் சுற்று ரஞ்சி போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு கூடியிருந்தது. மும்பை அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் பல வருடங்கள் கழித்து ரஞ்சி போட்டியில் களமிறங்கினார். மும்பையிலுள்ள சரத் பவார் கிரிக்கெட் அகாடெமி மைதானத்தில் மும்பை அணி ஜம்மு காஷ்மீரை எதிர்கொண்டது. முதல் இன்னிங்ஸிலேயே மும்பை அணி கொஞ்சம் தடுமாறியது. எதிர்பார்ப்போடு களமிறங்கிய ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் விட்டு திணறியது. 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த சமயத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் தனுஷ் கோட்டியானுடன் கூட்டணி சேர்ந்து 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அவரும் 57 பந்துகளில் 51 ரன்களை எடுத்திருந்தார்.
முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் மும்பை அணி தடுமாறியது. 86 ரன்கள் பின்னடைவோடு இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இங்கேயும் தனுஷ் கோட்டியானுடன் இணைந்து 194 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். 135 பந்துகளில் 119 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூரின் ஆட்டத்தால் மும்பை அணி 290 ரன்களை எட்டியது.
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரஹானே, ஸ்ரேயாஷ் ஐயர் என முக்கிய பேட்டர்கள் அத்தனை பேரும் சொதப்பும்போதும் ஷர்துல் தாகூர் நின்று அசாதாரண ஆட்டத்தை ஆடியிருப்பது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.!