மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு
Shashi Tharoor: 30 ஆண்டுகால ஐ.நா அனுபவம் டு காங்கிரஸ் சீனியர் தலைவர் - சசி தரூரை குறிவைக்கிறதா BJP?
பாஜக-வின் `ஆபரேஷன் சௌத்'தில் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் காங்கிரஸின் சசி தரூர்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க அரசு அமைத்திருக்கும் அனைத்துக்கட்சிகளின் குழுவுக்கு சசி தரூர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
குறிப்பாக, காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களில் இல்லாத சசி தரூரை நியமித்து வெளிப்படையாக இந்த ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க.
காங்கிரஸோ, பா.ஜ.க தனது நாரதர் முனி அரசியலை சிறப்பாகச் செய்வதாக விமர்சித்து வருகிறது. இந்த இரு தரப்புக்கு இடையில் சசி தரூரோ எதுவும் நடக்காதது போல் அலட்டிக்கொள்ளாமல் கேஷுவலாக கடந்து செல்கிறார்.

இதனாலேயே, சசி தரூர் பா.ஜ.க பக்கம் சாய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியிருக்கிறது.
எனவே, சசி தரூரின் அரசியல் பயணம் எப்போது தொடங்கியது, அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே எப்படி உலகறிந்த முகமாக இருந்தார், அரசியலில் நுழைந்தபோது சிவப்புக் கம்பளத்தில் வரவேற்கப்பட்ட காங்கிரஸில் தற்போது எந்த இடத்தில் இருக்கிறார், இந்த நேரத்தில் இவரின் பெயரை இழுக்க பா.ஜ.க-வின் தேவை என்ன என்பதை வரிசையாகக் காணலாம்.
1956-ல் மலையாள தம்பதிக்கு லண்டனில் பிறந்தார் சசி தரூர். இவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே இவரின் பெற்றோர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர்.
ஏற்காடு மான்ட்ஃபோர்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சசி தரூர், 1975-ல் டெல்லியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
தொடர்ந்து, அமெரிக்காவின் பழம்பெரும் பல்கலைக்கழகமான Tufts University-யில் Fletcher School of Law and Diplomacy-யில் 1978-ல் சர்வதேச உறவுகள் மற்றும் விவகாரம் பிரிவில் 22 வயதில் முனைவர் பட்டம் பெற்றார்.
அந்த சமயத்தில், Fletcher School of Law and Diplomacy-யில் குறைந்த வயதில் முனைவர் பட்டம் பெற்றவர் இவரே.

அதே ஆண்டில், இவரின் ஐ.நா பயணம் தொடங்கியது. அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் (UNHCR) அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கிய சசி தரூர், 1981 முதல் 84 வரையில் UNHCR சிங்கப்பூர் அலுவலகத்தில் தலைவராகப் பணியாற்றினார்.
அந்த சமயத்தில், வியட்நாம் அகதிகள் விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பாகச் செயல்பட்டார். இதன்மூலம், UNHCR ஊழியர்களுக்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989-ல் சிறப்பு அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின்னாளில், இந்தப் பிரிவு அமைதிகாக்கும் செயல்பாட்டுத் துறையாக மாறியது.
1996 வரை யூகோஸ்லாவியாவில் அமைதி காக்கும் குழுவை வழிநடத்திய சசி தரூர், அங்கு உள்நாட்டு போர் சமயத்திலும் பணியாற்றினார்.
தொடர்ந்து ஐ.நா-வில், பொது தகவல் துறையின் இடைக்கால தலைவர், துணை பொதுச் செயலாளர் எனப் பல பொறுப்புகள் வகித்தார்.

இவரின் இந்தப் பணிக்காலத்தில்தான் ஐ.நா-வில் முதல்முறையாக, யூத எதிர்ப்பு, அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமாஃபோபியா குறித்து செமினார் நடத்தப்பட்டது.
இவ்வாறு தனது சிறப்பான செயல்பாடுகளால், ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் வரை உயர்ந்த, சசி தரூர் 2006-ல் ஐ.நா பொதுச் செயலாளருக்கான தேர்தலில் தென் கொரியாவின் பான் கீ மூனிடம் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதன்பின்னர், 2007-ல் ஐ.நா-வில் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகினார்.
ஐ.நா பொறுப்புகள் மட்டுமல்லாது, 2001 முதல் 2008 வரை தி இந்து-விலும், 2007 ஜனவரி முதல் 2008 டிசம்பர் வரையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா-விலும் columnist-ஆக இருந்திருக்கிறார்.
India: From Midninght to Millennium, Nehru: The Invention of India, Why I am Hindu, Ambedkar: A Life என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.
ஐ.நா-வில் சுமார் 30 ஆண்டு காலம் பணியாற்றி உலக அளவில் நன்கறியப்பட்ட சசி தரூரை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க ஆகிய கட்சிகள் சிவப்புக் கம்பளமிட்டு காத்திருந்தன.
ஆனால், இவர் அந்த சமயத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸைத்தான் தேர்வுசெய்தார். 2009-ல் காங்கிரஸில் இணைந்த சசி தரூருக்கு, அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
`அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார், எலைட் நபர்' போன்ற விமர்சனங்கள் தன்மீது விழுந்தாலும், அதையெல்லாம் உதறி 99,998 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார் சசி தரூர்.

அதோடு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.பி.எல் பங்குகள் வாங்கியதாக தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால், 11 மாதங்களிலேயே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கூடவே, நாடாளுமன்றத்திலேயே முழுமையான விசாரணைக்கும் அழைப்பு விடுத்தார்.
2010-12 வரை அமைச்சராக இல்லாத காலகட்டத்திலும், பேரிடர் மேலாண்மைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர், வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர், பாதுகாப்புத்துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என ஆக்டிவாக இருந்தார்.
குறிப்பாக, 2012-ல் நாடாளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவில் மக்களவையில் உரையாற்ற காங்கிரஸில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் நான்காவது நபராக சசி தரூருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதே ஆண்டில், மத்திய மனிதவளத்துறை இணையமைச்சர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் வளரத் தொடங்கிய அந்த காலகட்டத்தில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் 2013 வரை அதிகம் பேர் பின்தொடரும் அரசியல்வாதியாக இவரே இருந்த்தார். அதன்பிறகு, மோடி இவரை ஓவர்டேக் செய்தார்.
2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காங்கிரஸால் பெறமுடியவில்லை. ஆனாலும், திருவனந்தபுரத்தில் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சசி தரூரை, வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக நியமித்தது பா.ஜ.க அரசு.

அதே ஆண்டில், மோடியைப் புகழ்ந்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து கட்சித் தலைமையால் சசி தரூர் நீக்கப்பட்டார்.
2019-லும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறவில்லை. இருப்பினும், அதே திருவனந்தபுரத்தில் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற சசி தரூரை, தகவல் தொழில்நுட்பத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக நியமித்தது பா.ஜ.க அரசு.
2022-ல் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்தது.
இதன் காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகுகினார்.
அதையடுத்து, அடுத்த தலைவர் யார் எனக் கட்சிக்குள் பேச்சுக்கள் எழுந்தது. கட்சித் தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தியோ, தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

அதைத்தொடர்ந்து, முதல் ஆளாக தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார் சசி தரூர். கிட்டத்தட்ட அவர்தான் அடுத்த தலைவர் எனப் பேச்சுக்கள் எழத்தொடங்கியது.
அந்த நேரத்தில், மல்லிகார்ஜுன கார்கே விருப்பமனு தாக்கல் செய்யவைக்கப்பட்டார். நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. மல்லிகார்ஜுன கார்கே தலைவராக்கப்பட்டார்.

2024-ல் மக்களவைத் தேர்தலும் வந்தது. இம்முறை பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதராவால் கூட்டணி ஆட்சி அமைத்தது.
அதேசமயம், காங்கிரஸ் பெரும் முன்னேற்றமாகத் தனியாக 99 இடங்களை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
திருவனந்தபுரத்தில் சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வெற்றிபெற்ற சசி தரூரை வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக நியமித்திருக்கிறது பா.ஜ.க அரசு.
பா.ஜ.க-வின் வெற்றிக்கு முக்கிய காரணமே தேர்தல் இல்லாத சமயத்திலும் தேர்தலை நோக்கியே தனது செயல்திட்டத்தை ஒவ்வொன்றாக செய்துகொண்டிருப்பதே.
அந்த வரிசையில் பா.ஜ.க-வில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் செயல்திட்டம் மிஷன் சௌத். தென்னிந்தியாவில், கர்நாடகாவில் மட்டும் பா.ஜ.க, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வால் வலுவாக காலூன்ற முடியவில்லை.
தென்னிந்தியாவிலுருந்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கும் பெரிய குரலாக அக்கட்சியில் யாரும் இல்லை.

அதற்கான பா.ஜ.க-வின் தேடலாகத்தான் சசி தரூர் குறிவைக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.
தேசிய அளவில் பரிட்சியமான முகம். அதைத்தாண்டி, ஐ.நா-வில் 30 ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம், வெளிவிவகாரக் கொள்கை, ஆங்கில புலமை, எழுத்து ஆகியவற்றில் எஸ்பெர்ட் என சசி தரூர் பட்டியல் நீள்கிறது.
கடந்த பிப்ரவரியில், கேரளாவில் பொருளாதார வளர்ச்சிக்கு இடதுசாரி அரசை பாராட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார் சசி தரூர்.
இது கேரளா எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்திய வேளையில், கூடவே அந்த சமயத்தில் அமெரிக்காவில் மோடி - ட்ரம்ப் சந்திப்பை பாராட்டி பேசியிருந்தார்.
இவரின் இந்தச் செயலைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் சிலர் சசி தரூரை பதிலுக்கு பாராட்டினர்.

தொடர்ந்து, அடுத்த மாதமே, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக மோடியை சசி தரூர் புகழ்ந்திருந்தார்.
இந்தச் செயல் காங்கிரஸில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்வாறிருக்க, இந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் திருவனந்தபுரம் தொகுதியிலுள்ள விழிஞம் பன்னாட்டு துறைமுகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் கலந்துகொண்டு, பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்துகொண்டார்.
அதற்கு முன்பாக, விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடியை வரவேற்றார். பின்னர், நிகழ்ச்சி மேடையில், "இன்றிரவு சிலருக்கு தூக்கம் வராது" என காங்கிரஸை மறைமுகமாகக் குறிப்பிட்டார் மோடி.
இவ்வாறு, `பாஜக - சசி தரூர் - காங்கிரஸ்' என சுற்றிக்கொண்டிருக்கும் அரசியல், தற்போது `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்க மத்திய பா.ஜ.க அரசு நியமித்த குழுவுக்கு சசி தரூரை தலைவராக நியமித்திருப்பதிலும் தொடர்கிறது.
குறிப்பாக, இந்த விஷயத்தில் நாரதர் வேலையை பா.ஜ.க சிறப்பாகச் செய்கிறது என காங்கிரஸ் ஒருபக்கம் விமர்சிக்க, மறுபக்கம் வெளியுறவுக் கொள்கையில் புலமைமிக்க சசி தரூரை வேண்டுமென்றே காங்கிரஸ் ஓரங்கட்டி அவமதிக்கிறது என பா.ஜ.க பதில் விமர்சனத்தை முன்வைத்துகிறது.

இதற்கு மத்தியில் சசி தரூர், "மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைத்து எம்.பி-க்ள் குழுவுக்கு தலைமை ஏற்கச் சொன்னார். இதில் அரசியல் எதுவும் இல்லை.
என் தகுதி எனக்குத் தெரியும். யாரும் என்னை அவமானப்படுத்த முடியாது. நாடு சிக்கலில் இருக்கும்போது, மத்திய அரசு உதவி கேட்கும்போது, நான் வேறென்ன சொல்ல முடியும்" எனக் கடந்துவிட்டார்.
நேற்றுவரை காங்கிரஸ் காங்கிரஸ் என்று கூறி சமயம் பார்த்து பா.ஜ.க-வில் இணைந்து மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர் என பதவிகள் பெற்றறவர்களும் இருக்கின்றனர்.
கடைசிவரை காங்கிரஸ்தான் என உறுதியாக இருப்பவர்களும் இருக்கின்றனர். இதில், சசி தரூர் என்னவென்று அவரின் அடுத்தடுத்த நகர்வுகளில் மெல்ல மெல்ல புலப்படக்கூடும்.!