Tanush Kotian: அஷ்வின் ஓய்வு; ஆஸி., புறப்பட்ட தனுஷ் கோட்டியன் யார்? ; உள்ளூர் ரெக்கார்டு என்ன?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்நிலையில் அஷ்வினுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து மெல்போர்னில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அதில் தனுஷ் கோட்டியன் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. அஷ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் இந்த தனுஷ் கோட்டியன் யார் என்பதைப் பார்ப்போம்.
26 வயதான தனுஷ் கோட்டியன் மும்பையைச் சேர்ந்தவர். தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளையும் 2 சதங்களுடன் 1,525 ரன்களையும் குவித்திருக்கிறார். 2023 - 24 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஞ்சி டிராபியில் சிறந்த ஆட்டக்காரருக்கான தொடர் நாயகன் விருதை தனுஷ் கோட்டியன் பெற்றிருக்கிறார்.
மும்பையின் 42வது ராஞ்சி டைட்டிலில் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல்லை பொறுத்தவரை 2024 சீசனில் ஒரே ஒரு மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். அவருக்கு ஐபிஎல்லில் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னாள் ஆஃப்-ஸ்பின்னர் ரமேஷ் பவாருக்குப் பிறகு இந்திய தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மும்பை சுழற்பந்து வீச்சாளர் கோட்டியன்தான்.
அஷ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல்தான் சேர்க்கப்படுவதாக இருந்துள்ளது. ஆனால் அவர், விஜய் ஹசாரே தொடரில் முதல் 2 ஆட்டங்களில் பங்கேற்ற நிலையில் சொந்த காரணங்களுக்காக ஓய்வு கோரியிருந்தார். இதன் காரணமாக தனுஷ் கோட்டியன் தேர்வாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.