US Issue: ``கைவிலங்குடன் 40 மணிநேர பயணம்; 19 பெண்கள் அவதி..'' -பிரதமருக்கு செல்வ...
Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!
கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் பரிந்துரைக் கடிதம் (இ.கியூ) அளிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு அவசர ஒதுக்கீடு அடிப்படையில் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பரிந்துரைக் கடிதத்தின் மீது சந்தேகம் கொண்ட சென்னை ரயில்வே டிக்கெட் பரிசோதர்கள், அலுவலா்கள், திருச்சி எம்.பி துரை வைகோவின் உதவியாளா் சங்கரைத் தொடா்பு கொண்டு விசாரித்தனா். இதில், அந்தப் பரிந்துரைக் கடிதம், எம்பி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டதல்ல. அது போலியானது என்று கண்டறியப்பட்டது.
இதனால், அந்த பயணி ஸ்டீபன் சத்தியராஜின் தொடா்பு எண்ணில் தொடர்புகொண்டு, எம்பி-யின் உதவியாளா் சங்கா் பேசியபோது, அவா் புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் எனக் கூறியிருக்கிறார். இதனால், அவர்மீது புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தில் எம்.பி துரை வைகோ தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. அப்படி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களின் நீண்ட விசாரணைக்குப் பிறகு சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராம்குமாா் (வயது 30) என்பவா் தனது கணினி மையத்தில் இந்தப் போலி பரிந்துரைக் கடிதத்தை தயாா் செய்து கொடுத்ததைக் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து, கணேஷ்நகா் காவல் நிலைய போலீஸாா், ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இதுபோன்று ராம்குமார் போலி இ.கியூ ஃபார்ம் அடித்து பண மோசடியில் ஏதும் ஈடுபட்டாரா எனற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்.பி துரை வைகோ பெயரில் போலி பரிந்துரை கடிதம் அடித்துக் கொடுத்த புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.