Trump 100: அதிபராகி 100 நாட்களை முடிக்கும் ட்ரம்ப்பின் 10 அதிரடி அறிவிப்புகள் - ஒரு பார்வை!
அமெரிக்க அதிபர் என்று ட்ரம்ப்பைச் சொல்வதை விட, அதிரடி அதிபர் என்று கூறினால் சரியாக இருக்கும்.
ஆம்... கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி, 'நான், டொனால்ட் ஜான் ட்ரம்ப்...' என்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து பரபர அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் ட்ரம்ப்.
அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, 46 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது ஆட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர், அவர் நகர்த்திய காய்களுக்குப் பின்னால், தனது பிரசாரத்தில் தூக்கிப் பிடித்த 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' தான் ஒலித்தது.

நாளையோடு (ஏப்ரல் 30), இவர் பதவியேற்று 100 நாட்கள் ஆக உள்ளது. இதை முன்னிட்டு அவரிடம் இருந்து எதாவது முக்கிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் நாளை அறிவிக்கிற அறிவிப்புகளை அப்புறம் பார்ப்போம். இன்று... இப்போது... இதுவரை அவர் அறிவித்துள்ள 10 அதிரடி அறிவிப்புகளை முதலில் பார்த்திவிடுவோம்.
1. கூடுதல் வரி
கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்குப் போதைப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகளை ஏற்றுமதி செய்கின்றன என்று குற்றம் சாட்டி, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அந்த நாடுகளின் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
2. சங்கிலியிட்டு...
'சட்டத்திற்குப் புறம்பான மக்கள்' என ஆவணம் செய்யப்படாத மக்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றினார் ட்ரம்ப்.
கைகள் மற்றும் கால்களில் சங்கிலியிட்டு, ராணுவ விமானத்தில் அவர்களை 'போர் கைதிகள் போல' அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பியது தான் பெரும் பூகம்பாகமாக வெடித்தது.
இதற்குப் பல உலக நாடுகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன.
3. வேலையில்லை
சம்பளங்களைச் சேமித்தல் போன்ற காரணங்களுக்காக, கடந்த மூன்று மாதங்களில், லட்சக்கணக்கான அமெரிக்க அரசுப் பணியாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றி உள்ளது ட்ரம்ப் அரசு.
இது அரசின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகளைத் தாமதப்படுத்தும் என்று இந்த முடிவு கடுமையான எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளது.

4. இஸ்ரேலுக்கு ஆதரவு
2023-ம் ஆண்டில் இருந்து நடந்துவரும் இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில், ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.
அதைத் தொடரும் விதமாக, ட்ரம்ப்பும் இஸ்ரேல் பக்கம் நின்று வருகிறார். மேலும், பாலஸ்தீனம் தொடுக்கும் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துவருகிறார்.
5. மாணவர்களின் வாய்களுக்குப் பூட்டு
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசுவது உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் அமெரிக்க மாணவர்களின் கல்வி நிறுத்தப்படும். அப்படிச் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்.
மேலும், அந்தக் கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும் அரசு நிதியுதவி ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு மற்றும் அதன் நடைமுறையின் உதாரணம், சமீபத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை மற்றும் நிதி நிறுத்தம்.
6. முயற்சி திருவினையாகவில்லை
அதிபராகப் பதவியேற்பதற்கு முன்பிலிருந்து, 'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு முயலுவேன்' என்று கூறி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெலன்ஸ்கியின் அமெரிக்கப் பயணம் தோல்வியைச் சந்தித்தது.
முதலில் பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என்று கூறிக்கொண்டிருந்த ட்ரம்ப் கூட, சமீபத்தில், "பேச்சுவார்த்தை தற்போது முடியாது. ரஷ்யா தாக்குதலைத் தொடர்ந்து வந்தால், ரஷ்யா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

7. பழிக்குப் பழி - பரஸ்பர வரி
'அனைத்து நாடுகளும் அமெரிக்கா மீது வரி விதிக்கிறது', 'அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சரி செய்ய வேண்டும்' என்று உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார்.
பின்னர், ஏப்ரல் 9-ம் தேதி சீனாவைத் தவிர, மற்ற நாடுகளுக்கு இந்த வரி விதிப்பு அமலை 90 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.
இந்த இடைப்பட்ட நாட்களில் உலக பொருளாதாரம், பங்குச்சந்தை பெரும் தள்ளாடலைச் சந்தித்தது.
8. 'நோ' அமெரிக்கக் குடியுரிமை
தற்காலிக விசா மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறி உள்ளவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'அமெரிக்கக் குடியுரிமை' கிடைக்காது என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார் ட்ரம்ப்.
இது நீதிமன்றங்களின் படி ஏற, தற்போது உத்தரவிற்காகக் காத்திருக்கிறது இந்தச் சட்டம்.
9. ஆண், பெண் மட்டும் தான்!
அமெரிக்காவின் ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே உண்டு. மற்ற பாலினத்தவர்கள் அவர்கள் பிறப்பு பாலின அடிப்படையில் அவர்கள் பாலினம் குறித்து அரசு ஆவணங்களில் கொடுக்கப்படும் அல்லது மாற்றப்படும் என்று உத்தரவிட்டிருந்தார் ட்ரம்ப்.
அவர் உத்தரவு நடைமுறைக்கு வந்து பிற பாலினத்தவர்களுக்குப் பயணம் போன்றவற்றில் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது.
10. கண்ணா... அமெரிக்கக் குடியுரிமை வேண்டுமா?
பதவியேற்றதும் அமெரிக்கக் குடியுரிமை பெறும் சட்டங்களைக் கடுமையாக்கிய ட்ரம்ப், இன்னொரு பக்கம், 'கோல்டு கார்டு அமெரிக்கா விசா' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம், எந்த நாட்டவராக இருந்தாலும் அமெரிக்காவில் குறைந்தது 5 மில்லியன் டாலர் முதலீட்டைச் செய்யும்போது, அந்த நபருக்கு அமெரிக்கக் குடியுரிமை கிட்டும்.
நிச்சயம், அவர் இத்தோடு நிறுத்திவிடப் போவதில்லை. இன்னமும், என்னென்ன அதிரடிகள்... வெடிகள் அவரிடம் இருந்து வரப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88