Tsunami: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளைத் தாக்கிய சுனாமி; பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியிருக்கிறது.
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் 19.3 கி.மீ ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து 125 கி.மீ கிழக்கு-தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது.

இதனால், ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
இதனால் ஜப்பானில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
ரஷ்யா, ஜப்பானை தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் சில இடங்களில் சுனாமி அலை தாக்கியிருக்கிறது.
ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்க ஆரம்பித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி சுனாமி முன்னெச்சரிக்கையாக அமெரிக்க கடலோர காவல்படை அனைத்து வணிகக் கப்பல்களையும், ஹவாயின் துறைமுகங்களையும் காலி செய்ய அறிவுறுத்தி இருக்கிறது.
ஹவாய் தீவில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களும் வெளியேறி இருக்கின்றனர்.