ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!
TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பதில்
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவரான ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து, மாநாட்டில் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
"யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம், ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்கிற வரைமுறைகள் உள்ளன.
தமிழ்நாட்டைக் காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை.
அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய், அண்ணா குறித்தும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார்.
விஜய்க்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்குத்தான் பின்னடைவாக மாறும். திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி தான் சரியானது எனத் தேசியக் கட்சிகளுக்குக் கூட தெரிந்துள்ளது.

விஜய் கட்சி தொடங்கியவுடன் ஆட்சியைப் பிடித்து விடலாம் எனக் கனவு காண்கிறார்.
அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதிமுக தொண்டர்கள் மனவேதனையுடன் உள்ளார்கள் என்பது விஜய்க்கு எப்படித் தெரியும்? எந்தத் தொண்டரிடம் விஜய் பேசினார்.
யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம்.
முதல் மாநாட்டில் திமுகவை பாயாசம் என்றார் விஜய். இந்த மாநாட்டில் பாய்சன் என்கிறார்.
அடுத்த மாநாட்டில் அமுது என்று பேசுவாரா? என்ன பேசுவார் என்று தெரியாது. அவருக்கு மட்டும்தான் தெரியும்" என்று விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.