மாறுபட்ட கதையில் ஆல்யா மானசா: பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ!
US Tarrif: `நண்பனாக இருப்பது உயிரைக் கொல்லும்? - அமெரிக்கா சொல்லும் பாடம்' - இரா.சிந்தன்
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
`அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம், ஆனால் அதன் நண்பராக இருப்பது உயிரைக் கொல்லும்'
– அமெரிக்க ராஜதந்திரி ஹென்றி கிசிஞ்சர்.
இந்த மேற்கோள் இப்போது உலகின் பல முனைகளில் இருந்தும் அதன் நட்பு சக்திகளால் எதிரொலிக்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த மேற்கோள் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம். தன்னுடைய எதிரிகள் மீது மட்டுமல்லாமல், நீண்டகால நண்பர்கள் மீதும் தடாலடியான வரி விதிப்பு அறிவிப்புகளை மேற்கொண்டார் அதிபர் ட்ரம்ப். இந்த அறிவிப்புகளை அவர் உடனடியாகச் செயல்படுத்தாவிட்டாலும், பேச்சுவார்த்தை மேசையில் தன்னை வலுவாக இருத்திக் கொள்ள இந்த மிரட்டல்களைப் பயன்படுத்துகிறார்.
இப்போது, ட்ரம்ப் மேற்கொண்டிருக்கும் புதிய வரிகள் இந்தியாவை நேரடியாகக் குறிவைத்துள்ளன. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அமலாகியுள்ளது. இனிமேல் நமது ஏற்றுமதிகள் 33.26% வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.
செப்டம்பர் மாதம் முதல் கூடுதல் வரியாக மேலும் 25% அமலாகும் என்றும், இனிமேல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் அடுத்தடுத்து மிரட்டல்களை விடுத்து வருகிறார் அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப். இந்த வரியிலிருந்து கச்சா எண்ணெய், சுத்திகரித்த எரிபொருட்கள், ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்கள், பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு மட்டுமே விலக்கு உள்ளது.

ஜவுளி, ஆடைகள், நகைகள், ரத்தினங்கள், மருந்துப் பொருட்கள், கடல் உணவு, இயந்திரப் பாகங்கள், சில எலக்ட்ரானிக் உபகரணங்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும். இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18% ஆகும். இதில் சரிபாதியளவு ஏற்றுமதிகளை இந்தப் புதிய வரிகள் பாதிக்கக்கூடும் என்று சில கணக்கீடுகள் கூறுகின்றன.
இருப்பினும், பி.எச்.டி.சி.சி.ஐ மதிப்பீட்டின்படி, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இதனால் பாதிக்கப்படும் என்றும், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வரிகளால் ஏற்படும் பாதிப்பு 0.19 சதவீதம்கூட இருக்காது என்றும் கூறப்படுகிறது.
வரிகளைச் சமாளிக்க..!
ஆனால், துறைவாரியான செய்திகளைப் பார்க்கும்போது, கடுமையான சூழலுக்கு நாம் தயாராக இல்லாத நிலைமையில், இந்தத் தடாலடியான வரிகள் ஏற்றுமதி சார்ந்த சிறு நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது தெரிகிறது. அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான், டார்கெட், கேப் போன்ற சில்லறை வர்த்தகப் பெருநிறுவனங்கள், இந்திய நிறுவனங்களிடமிருந்து ஜவுளிப் பொருட்கள் வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

அந்த நிறுவனங்கள் உற்பத்தி விலையை மேலும் குறைக்கும்படி இந்திய நிறுவனங்களை அழுத்துகின்றன. வங்காளதேசத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திச் செலவிலேயே இந்திய நிறுவனங்களும் தங்கள் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா விதிக்கும் வரிகளைச் சமாளிக்க இந்திய நிறுவனங்கள் தங்களின் பொருட்களுடைய உற்பத்தி விலையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் அந்த அழுத்தத்தின் நோக்கம். இவ்வாறு செய்தால் நம் தொழிலாளர்களுக்குக் கூலி குறையும், வேலைப் பளு அதிகமாகும்.
மிரட்டுவது நமக்குப் புதிதா?
இறக்குமதி வரிகள் என்ற ஆயுதம் இருமுனைக் கத்தியே ஆகும். தொடக்கத்தில் அது நமது உற்பத்தியைப் பாதித்தாலும், நீண்டகால நோக்கில் இது அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டுக்கு 2500 டாலர்கள் வரை கூடுதலான செலவை அமெரிக்கக் குடும்பங்களுக்கு ஏற்படுத்தும். எனவே, இந்த மிரட்டல்களுக்குப் பதற்றமாகாமல், தீர்க்கமான, நேரடியான எதிர்வினையை இந்தியா ஆற்ற வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம் ஆகும்.

1950-களில், சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான தனது உத்தியின் ஒரு அங்கமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என அமெரிக்கா முயற்சி செய்தது. ஆனால், அணிசேராக் கொள்கையை முன்னெடுத்தது இந்தியா. அதற்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் போஸ்டர் டல்லஸ், 'எங்களோடு நிற்காதவர்கள், எங்களுக்கு எதிரிகள்' என்று கூறி மிரட்டினார். இருந்தாலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன் சோவியத் ரஷ்யாவின் உதவிகளையும் பயன்படுத்தி தனது சுய சார்புத் தன்மையை வலுப்படுத்தியது.
சுதந்திர வங்காளதேசத்தை உருவாக்குவதற்காக இந்தியா தலையீடு செய்தபோது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற விருப்பத்தோடு அமெரிக்கா நகர்ந்தது. இந்திய எல்லையை நோக்கி நகர்ந்த அமெரிக்காவின் போர்க்கப்பலை இந்தியா அனுமதிக்கவில்லை. உறுதியான இந்தியாவின் நிலைப்பாடு, வரலாற்றில் இப்போதும் நிலைத்திருக்கிறது. ஆனால், சோவியத் ரஷ்யாவின் தகர்வுக்குப் பின்னர், உலகமயக் கொள்கைகளை இந்தியா ஏற்கத் தொடங்கியதும் அணிசேராக் கொள்கையும் பல்வேறு நெளிவு சுழிவுகளை எதிர்கொண்டது. இப்படியான பின்னணியில்தான் நாம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டலை எதிர்கொள்கிறோம்.

கடந்த கால மிரட்டல்களும், நிர்ப்பந்தங்களும் 'இந்தியாவின் நலனைப் பாதுகாப்பதற்காக' என்ற வகையில் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், ட்ரம்ப் தன்னுடைய நிர்ப்பந்தங்களை 'அமெரிக்க நலன்' என்ற அடிப்படையில் நம் மீது திணிக்கிறார். உலகமயக் கொள்கைகள் முன்வைக்கப்பட்ட போது சொல்லப்பட்ட 'தடையற்ற வர்த்தகம்', 'சுதந்திரமான சந்தை' போன்ற எல்லாக் கருத்தாக்கங்களும் இப்போது மறக்கப்பட்டுவிட்டன. எனவே, இந்த மிரட்டல் போக்கு மிகவும் அப்பட்டமானதாக இருக்கிறது.
இந்தியாவின் நிலைமை என்ன?
அதீதமான வரி உயர்வு அல்லது அமெரிக்காவுக்கு லாபகரமான ஒப்பந்தம் என்பதுதான் ட்ரம்ப் அணுகுமுறை. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். 47ஆவது அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அவரை நேரில் சென்று சந்தித்த ஒருசில உலகத் தலைவர்களில் மோடியும் ஒருவர்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ராணுவ ஒப்பந்தமும், எரிசக்தி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இருதரப்பு வர்த்தகங்களை இரட்டிப்பாக்கும் விதத்தில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் தொடங்கிட முடிவு செய்யப்பட்டது. ராணுவ ஒப்பந்தத்தில் நம் மீது அதிக விலை உயர்ந்த உபகரணங்கள் திணிக்கப்பட்டதாகவும், எரிசக்தி ஒப்பந்தத்தின் பேரால் கூடுதல் விலையில் கச்சா எண்ணெயும், அணு உலைகளும் வாங்க நிர்ப்பந்தம் ஏற்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் கூறுகின்றன.

ஆனால், ட்ரம்ப் இந்த ஒப்பந்தங்களால் மகிழ்ச்சியடையவில்லை. கூடுதல் வரிவிதிப்பிற்கான மிரட்டலை தொடங்கினார். பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வலுப்படுவதையும், டாலரின் உலக ஆதிக்கத்திற்கு மாற்று குறித்த விவாதங்கள் அங்கே நடப்பதையும் அவர் கவனித்தார்.
இந்தியா அந்தக் கூட்டமைப்பில் இடம்பெறுவதால் கூடுதலான வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றார். பிரிக்ஸ் கூட்டமைப்பிலிருந்து இந்தியா வெளியேறவில்லை. பிரிக்ஸ் புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு நாடுகள் கொண்ட அமைப்பாக விரிவடைந்தது. ஆனால், பிரிக்ஸ் அமைப்புக்குள் இந்தியா தனது நிலைப்பாட்டை மிகவும் நெகிழ்வாக அமைத்துக் கொண்டதும் கவனிக்க வேண்டியது.
இதே காலகட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தலையிட்டுத் தடுத்ததாகவும் பலமுறை கூறினார். இருதரப்புப் பிரச்னையில், மூன்றாவது தரப்பின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு கைவிடப்பட்டதாக அவர் கூறினார். இந்தியாவின் தனித்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது.
மோடி தன்னுடைய நண்பர் என்று பலமுறை கூறினாலும், இந்தியாவிற்குள் மோடியின் பிம்பத்தைப் பாதிக்கச் செய்வதன் மூலம் அவரை மட்டம் தட்டி வைக்க வேண்டும் என்று ட்ரம்ப் முயற்சித்தார். பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபரின் கருத்துகளை நேரடியாக மறுக்கவில்லை. அணிசேராக் கொள்கையில் உறுதி காட்டி, தனக்கென்று ஒரு முகாமை உருவாக்கியிருந்த இந்தியா தற்போது எந்தவொரு முகாமுக்கும் தலைமையேற்கவில்லை என்பது புதிய யதார்த்தம் ஆகும்.

என்ன கேட்கிறார் ட்ரம்ப்?
அமெரிக்க அதிபரின் மிரட்டல் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் தரப்பு பிரதிநிதிகள் 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவுடன் நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் முழு விபரமும் வெளியில் வரவில்லை. இருப்பினும், அமெரிக்கப் பெருநிறுவனங்களின் பண்ணைகளில் தயாராகும் பால் பொருட்களையும், அமெரிக்கப் பெருநிறுவன விவசாய விளைபொருட்களையும் இந்தியச் சந்தையில் தடையின்றி நுழைந்திட அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கத் தரப்பு நிர்ப்பந்தம் செய்வது வெளியே தெரிய வந்துள்ளது. அதுவும் மரபணு மாற்ற விதைகளை, அமெரிக்க விதிமுறைகளின்படியே இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் செய்யப்படுகிறது.
அதே போல, ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற மிரட்டலும் நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடக்கும் போருக்கு இந்தியா இவ்வாறு நிதியளித்து வருவதாக அமெரிக்கா அபாண்டமாகக் கூறுகிறது. ஆனால், இதே விதமான வர்த்தக உறவை ரஷ்யாவுடன் பராமரித்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா தனது வர்த்தகத்தைத் தொடர்கிறது.
அமெரிக்காவின் பெருநிறுவன விவசாய உற்பத்திக்கு இந்தியச் சந்தைகளைத் திறந்துவிடுவது நேரடியாக நம்முடைய உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும். சீனா போன்ற நாடுகளே, தங்களுடைய சோயாபீன் சந்தையை அமெரிக்காவிற்குத் திறந்துவிட்டதால் கடுமையான விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றன. இழந்த தன்னிறைவை மீண்டும் எட்ட முடியாமல் சிக்கலுக்குள்ளாகியுள்ளன.
அதே போல, இந்தியாவும் தனது விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கும். கடுமையான முயற்சிகளால் இந்தியா தன்னுடைய பால் தேவைகளில் தன்னிறைவு பெற்றுள்ளது. பால் பொருட்கள் இறக்குமதிக்கான வரிகளை நீக்கிவிட்டால் இந்தச் சுய சார்பு குலைந்துபோகும். இந்த விசயத்தில், இந்திய அரசாங்கமும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

ஆனால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விசயத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்கின்றனர். நாம் குறைந்த விலைக்குப் பெறக்கூடிய கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதி செய்கிறோம். உள்நாட்டுச் சந்தையில் அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதில்லை. எத்தனால் கலப்பு, இறக்குமதியில் விலைக் குறைவு என இரட்டிப்பு நன்மைகளை அந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களே பெறுகின்றன.
இருந்தாலும், ரஷ்யாவிடம் நாம் எண்ணெய் வாங்குவதால் டாலர் கையிருப்பு பராமரிக்கப்படுகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் மற்ற சந்தையில் கிராக்கி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாடு மாறினால் மேற்சொன்ன பலன்களை நாம் இழப்போம். 'ஜி 7 நாடுகள் விதித்த விதிமுறைகளின்படியே நாங்கள் இறக்குமதியை மேற்கொண்டு வருகிறோம். அதற்காக எங்களைத் தண்டிக்கக் கூடாது' என்ற கோரிக்கையை இந்தியத் தரப்பு எழுப்பி வருகிறது.
பணியுமா இந்தியா?
ட்ரம்ப் இதுபோன்ற மிரட்டல்களை உலகம் முழுவதும் விடுத்து வந்த போதிலும், இதுவரை ஐரோப்பிய ஒன்றியம், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதிசெய்துள்ளன. அமெரிக்க ஏற்றுமதிக்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது சந்தையை மேலும் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் புதிதாக 600 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும், அமெரிக்காவிலிருந்து 750 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தியை வாங்குவதாகவும் அறிவித்துள்ளது. இந்தோனேசியாவும், வியட்நாமும் கூடுதல் வரிகளை ஏற்றுள்ளன.
சீனாவைப் பொருத்தமட்டில் அது பதிலடி கொடுத்தபடியே பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கிறது. தனது பலவீனங்களைச் சரிக்கட்ட உலக உறவுகளைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக தனது சோயா பீன் இறக்குமதிக்காக அமெரிக்க சார்புநிலையைக் குறைத்து பிரேசிலுக்கு மாறியது. அரிய தனிமங்களைப் பிரித்து ஏற்றுமதி செய்வதில் தனக்குள்ள ஏகபோகத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அரிய தனிமங்களின் மொத்த உலக உற்பத்தியில் சுமார் 70 சதவீதம் சீனாவில் நடக்கிறது.

பிரேசில் நாட்டில் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற லூலா தனது எதிர்ப்பை உறுதியாகக் காட்டி வருகிறார். அரசியல் காரணங்களுக்காக வர்த்தக உறவை ஆயுதமாக்க முடியாது என்கிறார் அவர். அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்போம் என்று பதிலடியும் தருகின்றார்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் அதன் நெகிழ்வான அணுகுமுறை உலக அரங்கில் நமக்கு மரியாதையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். மேலும், 2018ஆம் ஆண்டில் நடந்ததையும் நாம் மனதில் நிறுத்த வேண்டும். ஈரான் மீது தடைகளை விதித்த அமெரிக்கா அதனைப் பின்பற்ற வேண்டுமென இந்தியாவை நிர்ப்பந்தம் செய்தது. இந்த நிர்ப்பந்தத்திற்கு முதலில் இந்தியா பணியவில்லை. ஆனால் பின்னர் எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தியது. இதனால் இந்திய ஈரான் நட்புறவு பாதிக்கப்பட்டது. நம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டது.
என்ன செய்ய வேண்டும்?
ஏற்றுமதிக்கான மாற்றுச் சந்தை வாய்ப்புகளைத் தேடுவது இந்தியா உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடாகும். அதுவரை இந்தியாவின் சிறு, குறு ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட அரசு கைகொடுக்க வேண்டும். அதே சமயம், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டுக்கு அதன் உள்நாட்டுச் சந்தை என்ற மாபெரும் வாய்ப்பு இருப்பதைக் கவனிக்க வேண்டும். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டுமானால் அதற்கேற்ற பொது முதலீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். மோடி அந்தத் திசையில் நாட்டைச் செலுத்துவாரா என்பதுதான் நம் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி.
இந்திய உற்பத்தியை ஊக்குவிக்கும் 'மேட் இன் இந்தியா' என்ற முழக்கத்தை, 'மேக் இன் இந்தியா' என்று மாற்றினார் பிரதமர் மோடி. உலகின் மாபெரும் உற்பத்தி நிறுவனங்களெல்லாம் இந்தியாவை நோக்கி வந்து, இங்கே உற்பத்தியைச் செய்து தங்கள் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அந்த விருப்பம் கைகொடுக்கவில்லை. வெளிநாட்டு முதலீடுகளையே எதிர்பார்த்திருப்பதால், சுயசார்புக்கான நிலைமைகளிலிருந்து நாம் மெல்ல மெல்ல விலக்கப்படுகிறோம். அது நம்மை உலக நாடுகளின் முன் பலவீனமாக்குகிறது.

ஏற்கனவே பலவீனமாக உள்ள இந்திய ரூபாயின் மதிப்பைப் புதிய அமெரிக்க வரிகள் மேலும் பலவீனமாக்கும். இந்தச் சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின், டாலர் நீக்க நடவடிக்கைகள் வேகப்பட்டால், செலாவணிப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கலாம். ஆனால், அதுவும் சமீப ஆண்டுகளில் நடக்கப்போவதில்லை. இப்போதைக்கு நமக்குள்ள ஒரே பிடிமானம், ரஷ்யா, ஈரான் நாடுகளிலிருந்து குறைந்த விலைக்குக் கச்சா எண்ணெய், உள்நாட்டுச் செலாவணியிலேயே பெறக்கூடிய வாய்ப்புதான். ஆனால் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த நமக்கு அரசியல் உறுதிப்பாடு தேவை.
அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணியாமல் உறுதியாக நிற்பதுடன், அணிசேரா நாடுகளின் தவிர்க்க முடியாத தலைமையாக இந்தியா எழுந்து நிற்க வேண்டும். வலிமையான உள்நாட்டுச் சந்தை, சுயசார்பைக் கைவிடாத ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகள், பல துருவ உலகத்திற்கான முயற்சிகளை வேகப்படுத்துவது என்ற திசையில் நாம் பயணிக்கும் போதுதான், அரசியல் உறுதியை நாம் கைக்கொள்ள முடியும்.

அமெரிக்காவுக்கு நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை – நிரந்தர அமெரிக்க நலன் மட்டுமே உண்டு என்றார் ஹென்றி கிசிஞ்சர். அவ்வாறே, இந்திய உழைப்பாளி மக்களின் நலனே நிரந்தர இலக்கு என்ற புள்ளியில்தான் நமக்கான திறவுகோல் உள்ளது.!
- இரா.சிந்தன்