இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்- முதலீட்டாளா்களுக்கு பிரதமா் ம...
Valentine's Day: "சிகரெட் அடிக்கிறத சொல்லக்கூடாதுனு கொடுத்த லஞ்சம்..." - தாத்தா-பாட்டி லவ் ஸ்டோரி!
நியூஸ் பேப்பர் வீட்டு வாசல் கதவைத் தட்டுன அடுத்த நொடியே, அந்தப் பேப்பருடன் வீட்டின் முன் படிக்கட்டில் ஆஜாராகிவிடுவார் அவர். ஆவி பறக்கச் சுடச்சுட காபி டம்ளருடன் அவர் பக்கத்துல வந்து உட்காந்துப்பாங்க அவரோட மனைவி.
அவரோ எழுத்துக் கூட்டிக் கூட்டி ஒவ்வொரு செய்தியா படிக்க, அவரது மனைவியோ 'ஊ...' கொட்டி உன்னிப்பா கேட்டுக்கிட்டு இருப்பாங்க.
நியூஸ் பேப்பரின் கடைசி பக்க கடைசி வரி முடிய, இரண்டு டம்பளர்களிலும் காபி முடிஞ்சுருக்கும். அடுத்த ஐந்து நிமிசத்திற்கு, 'அது என்ன இப்படி? இது என்ன இப்படி?'-ங்கற விவாதத்துக்கு அப்புறம், காலி காபி டம்ளர்களோட சின்ன தளர்வான நடையில் அவரோட மனைவி சமையலறையை நோக்கி நகர, இவரும் இவருடைய வேலையைப் பாக்க போவாரு.
இது படக்காட்சியோ, நாவல் காட்சியோ இல்ல... நான் தினம் தினம் பார்த்த காட்சி. அதுவும் என்னுடைய பாட்டி - தாத்தாவின் காதல் காட்சி.
'இதுல எங்க காதல் இருக்கு?'னு தோணலாம். நல்ல கவனிச்சா, அந்த டம்ளருல இருக்கும் காபியோட மணம் பாட்டியோட காதலைச் சொல்லும். தாத்தா எழுத்துக்கூட்டி படிச்ச நியூஸ் பேப்பரோட கடைசி வரி, அவரோட காதலா மாறியிருக்கும்.
எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதலா தாத்தா துணிய பாட்டி துவைச்சு பாத்ததே இல்லை. ஒரு நாள் அந்தக் கதைய கேக்கும்போது தான், 'அப்போவே அப்படியா...?'ங்கற பிரமிப்பு தட்டியது.
தாத்தா பாட்டிக்கு என்னோட அப்பா முதல் குழந்தை. அப்பா பிறந்ததும், 'பச்ச உடம்புக்காரி'னு தாத்தா துவைக்க தொடங்குனது, பாட்டி இறந்து, பின்னர், தாத்தா இறந்தபோது கூட, அவரோட துணிக்கொடில வேட்டி தொங்கிட்டு இருந்துச்சு.
தாத்தானால சரியா நடக்க முடியாது. சுவரைப் பிடிச்சு அப்படித்தான் நடப்பாரு. குச்சிப் பிடிக்கக்கூடாதுனு ஏனோ அவருக்கு வைராக்கியம்.
அப்படி இருந்தாலுமே வீடு கூட்டறது, பாத்திரம் கழுவறது எல்லாமே தாத்தா துறைதான். இதெல்லாம் தாத்தா பண்ணிட்டு இருக்கும்போது, பாட்டி ஹாயா தலைக்குக் கைக்கொடுத்து ஜம்முனு பெட்ல படுத்துட்டு டிவி பாத்துட்டு இருப்பாங்க.
இது பெண்ணாதிக்கமோ, ஆண் அடிமைத்தனமோ கிடையாது. அது வெறும் வீட்டு வேலை பங்கீடு... அவ்வளவுதான். இந்தத் தெளிவு அவங்க ரெண்டு பேருக்கிட்டயும் இருந்துச்சு.
ஒரு நாள் எக்ஸாம் டைம்ல வீட்டுக்கு ஸ்கூல் முடிஞ்ச அரை நாள்ல வந்துட்டு இருந்தேன். எப்பவுமே உட்கார்ந்துட்டு இருக்க பேக்கரில, அப்பவும் தாத்தா பிரசன்ட் ஆயிருந்தாரு. ஆனா, வழக்கத்துக்கு மாறா அவரு கைல சிகரெட் இருந்துச்சு. அதை நானும் எதிர்பார்க்கல... அவரும் எதிர்பார்க்கல.
நைசா என்னைக் கூப்பிட்டு, 'உனக்கு என்ன வேணும்'னு கேட்டு, பிஸ்கட் வாங்கி தந்தாரு. நான் இந்த சம்பவத்தைப் பாட்டிக்குச் சொல்லாம இருக்கறதுக்கு தான் அந்த லஞ்சம்.
என்னோட பாட்டிக்கு சிகரெட் அடிக்கறது சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. அதனால, அவங்களுக்குத் தெரியாம அப்பப்ப சிகரெட் அடிப்பாரு போல. அன்னைக்கு 'அவரோட கெரகம்' நான் பாத்துட்டேன். இந்த மறைப்பும், லஞ்சமும் பாட்டி மேல இருக்க பயத்துனால இல்ல... அது தாத்தா பாட்டிக்கு தர்ற 'காதலுக்கு மரியாதை'.
இந்தக் காதலைப் பாத்து வளர்ந்ததாலோ என்னவோ, என்னோட அப்பாவுக்கு ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கல்.
வீட்டு மாடில பூத்திருக்க ரோஜாப்பூவைப் பறிச்சுட்டு வந்தாக்கூட, அம்மாவைக் கூப்பிட்டு அம்மா கைல தான் அப்பா தருவாங்க. அப்போ அம்மா முகத்துல பூக்கற வெக்கம் அந்த பூவை விட பல மடங்கு அழகா இருக்கும்.
எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஒரு சண்டை கூட இல்லாம அம்மா, அப்பாவுக்கு கழிந்த நாட்கள் அமாவசை அன்னைக்கு நிலவைத் தேடுறது மாதிரி தான். ஆனா, அம்மா ஊர்ல மட்டும் இல்லைனா, அப்பா 'இதயம்' முரளியாவே மாறிடுவாரு.
டெக் கேசட், சி.டி காலத்துல அதாவது நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்த காலம் வரை, அம்மா ஊர்ல இல்லைனா, அப்பா அவங்களோட கல்யாண வீடியோவைப் பாக்காம இருக்கவே மாட்டாரு. அம்மா ஊர்ல இல்லாத இரவுகள்ல, அந்த கல்யாண வீடியோ தான் அப்பாவுக்குத் துணை.
இப்போலாம் அம்மா ஊர்ல இல்லனா, 'டான்'னு ஸ்கூல் பெல் அடிக்கற மாதிரி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை அப்பா போன்ல இருந்து அம்மா போனுக்கு கால் போயிடும். அத அம்மா, எங்க கிட்ட சொல்லும்போது, 'ஆளு இருந்தா சண்டையே தீராது... அதுவே இல்லைனா, போன் பண்ணி உயிர எடுப்பாரு'னு சொல்லுவாங்க பாருங்க. அப்போ அம்மா முகத்துல எட்டிப்பார்க்குற கர்வம் நிறைஞ்ச சிரிப்பை இந்த உலகத்துல எங்கயுமே பாக்க முடியாதுனு தோணும்.
ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை எங்க அம்மா மதிய நேரத்துல தூங்குவாங்க. அதை கெடுத்தறக்கூடாதுனு அப்பா ஸ்கூல்ல இருந்து வண்டிய கிளப்பும்போதே, 'அம்மா தூங்கிட்டிருக்கா... சத்தம் இல்லாம போய் சாப்பிடணும் சரியா...?'னு எங்களை (என்னையையும், என் அக்காவையும்) தயார்ப்படுத்திருவாரு. இப்போ, அதை யோசிச்சு பாக்கும்போது, அது அம்மாவோட குட்டி தூக்கத்துக்குக்கூட அப்பா கொடுக்கற மதிப்பு அது-னு பெருமையா இருக்கு.
இவங்க காதலோட உச்சம் 'சில்லி பரோட்டா'ல ஒளிஞ்சிருக்கு. 'என்னது சில்லி பரோட்டாலயா'-ங்கற கேள்வி எட்டிப்பார்க்குதா? ஆமா, அம்மா - அப்பா சண்டை ரொம்பவும் முத்திப்போய், அம்மா சாப்பிடாம இருந்தாங்கனா, அப்பாவோட வெள்ளை கொடி அந்த 'சில்லி பரோட்டா' தான்.
அப்பா வாங்கிட்டு வந்ததுமே, அம்மா லேசுல இறங்கி வந்துடமாட்டாங்க. நான் வரமாட்டேன்னு அம்மா அடம்பிடிக்க, அப்பா எப்படியோ சமாதானம் பண்ணி கூப்பிட்டு வந்து, அந்த சில்லி பரோட்டா அம்மா சாப்பிட்டதும் அந்த சண்டை சத்தமே இல்லாமல் காணாமல் போய்விடும்.
'என்ன வந்தாலும் பாத்துக்கலாம்'ங்கற தைரியம் அம்மாகிட்ட மில்லியன், பில்லியன், டிரில்லியன் டன் கணக்குல கொட்டிக்கிடக்கு. பாத்துட்டு இருந்த வேலை திடீர்னு ஒருநாள் இல்லாம போனதுல இருந்து இப்போ மாடி வீட்டுல இருக்க வரைக்கும், அம்மா அப்பாவுக்கு கொடுத்துருக்க நம்பிக்கையும், தன்னம்பிகையும் அளவிட முடியாதது. அம்மாவோட அந்த தைரியம் அவங்களோட காதலின் உச்சம்.
அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துகள்!