பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
Valentine's Day: கெடா வெட்டில் பிறந்த காதலர் தினம்... யார் இந்த வாலன்டைன்?
"ஏய் கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு..." இந்தாருப்பா லந்தா காதலர் தின வரலாறுன்னு தலைப்ப வச்சுட்டு என்னய்யா பாட்டு பாட்டிகிட்டு இருக்க என்று கேட்கும் உங்கள் மைண்டு வாய்ஸ் கேட்கிறது. ஆனால் காதலர் தினத்தின் வரலாற்றுக்கும் கெடா வெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்பதால்தான் இந்த நின்னுக்கோரி வர்ணம்.
இப்போது உலகெங்கும் காதலர்கள் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இந்த திருவிழாவின் வேர்களைத் தேடினால் அது பண்டைய ரோமாபுரி நோக்கிச் செல்கிறது. அங்கே நாம் டைம் டிராவல் செய்து பார்த்தால் ஆடுகளும், பன்றிகளும் ஆண்களைப் பார்த்துப் பயந்து ஓடும் காட்சிகளைப் பார்க்கலாம். ஏனெனில் அவை லூப்பர்காலியா என்கிற 'பாகன்' (Pagan) மதப் பண்டிகையில் பலியிடப்படப்போகின்றன என்பதால்தான்.

கி.மு 6-ம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட இந்த பண்டிகை பிப்ரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்பட்டது. பாகன் மதம் இயற்கையை வழிபடும் தொன்மத்தைக் கொண்ட ரோமாபுரியின் தொன்மையான மதமாகும். இங்கே நாம் விளைச்சலுக்குப் பிறகு குலசாமிக்குக் கிடா வெட்டுவது போல, பாகன் மதத்தில் ஃபானஸ் என்ற விவசாயத்தின் கடவுளுக்கும், ரோம் நகரத்தை உருவாக்கியவர்கள் என்று நம்பப்படுகிற ரோமுலஸ், ரீமஸ் ஆகியோருக்கும் படையலிடும் விழாவாக இது பார்க்கப்பட்டது.
ரோமுலஸ், ரீமஸ் ஆகியோர் பாகுபலியைப் போல அரசியல் சதியால் நதியில் விடப்பட்டு, பிறகு ஒரு பெண் ஓநாயால் கைப்பற்றப்பட்டதாகப் புராணக் கதை இருக்கிறது. அதில் அந்த பெண் ஓநாய் இவர்களுக்கு ஒரு குகையில் வைத்து பால் கொடுத்தது என்று நம்பிக்கையும் உண்டு. லூப்பர்கள் என்று அழைக்கப்படும் அந்த குகையில் பாகன் மதத்தின் பூசாரிகளான லூபர்க்கிகள், மக்களோடு கூடி, ஆடுகள், நாய்களைப் பலியிட்டனர். பலியின் பிறகு, அவர்கள் ஆட்டுத்தோலைத் துண்டுகளாக வெட்டி, அதைப் பலியிடப்பட்ட இரத்தத்தில் நனைத்து, பெண்கள் வயல்களைச் சவுக்கால் அடித்தனர். இந்தச் சடங்கு பெண்களின் கருவுறுதலை ஊக்குவிக்கும் என்றும், பயிர்களின் வளத்தை உறுதிப்படுத்தும் என்றும் நம்பப்பட்டது.

இதே விழாவில் திருமண லாட்டரி என்று மற்றொரு சடங்கும் நடைபெற்றது. அதில் இளைஞர்கள் (ஆண்கள்) ஒரு பெரிய ஜாடியில் தங்கள் பெயர்களை எழுதி வைப்பார்கள். மற்றொரு ஜாடியில் இளம் பெண்களின் பெயர்கள் எழுதி வைப்பார்கள். முதல் ஜாடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர், பெண்களின் பெயர்கள் நிரம்பிய ஜாடியிலிருந்து ஒரு சீட்டை எடுப்பார். அதில் இருக்கும் பெயரே அவரது ஜோடி. இப்படி ஜோடியாக்கப்பட்டவர்கள் லூப்பர்காலியா திருவிழா முடிந்த பிறகுத் திருமணம் செய்து கொண்டார்கள். இப்படி ரோமானியர் சமூகத்தில் புதிய உறவுகளை உருவாக்கி மக்கள்தொகை வளர்ச்சிக்கு உதவிய அந்த சடங்கே இன்றைய நவீன காதலர் தினத்தின் தொடக்கம்.
இந்த நிலையில் கி.பி 1 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் யூதேயா நாட்டில் தோன்றி மெல்ல ரோமாபுரி பேரரசை நெருங்கியது. ரோமாபுரியில் கிறித்துவத்தை ஏற்க ஆரம்பித்தவர்கள், அதன் பூர்விக பாகன் மதத்தின் கடவுள்களை ஏற்க மறுத்தனர். இதனால் மதம் மாறியவர்கள் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள். கொடுங்கோல் பேரரசன் நீரோ, டயோக்லீஷியன், கலேரியஸ் ஆகியோரால் 300 ஆண்டுகளாக அவர்கள் வதைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் கி.பி 313-ம் ஆண்டு பேரரசர் கான்ஸ்டன்டைன் மிலான் சாசனம் என்ற ஒன்றை வெளியிட்டு, கிறிஸ்தவர்களுக்கு மத சுதந்திரத்தை அளித்தார்.

அதன்மூலம் அனைத்து மதங்களும் ரோமானியப் பேரரசில் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று அறிவித்தார். கி.பி 380ல், பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கிறிஸ்தவத்தை ரோமானியப் பேரரசின் அதிகாரப்பூர்வ மதமாக மாற்றினார். இதனையடுத்து கங்கா தன்னைச் சந்திரமுகியாக நினைக்கத் தொடங்கினாள் என்பதாக நான்காம் நூற்றாண்டில் பாகன் மதம் கிறிஸ்தவ மதமாகத் தொடங்கியது. கிறிஸ்தவத் தலைவர்கள் பாகன் திருவிழாக்களை ஒழித்து, அவற்றைக் கிறிஸ்தவ கொண்டாட்டங்களாக மாற்றத் தொடங்கினார்கள். அப்படித்தான் லூப்பர்காலியா திருவிழாவின் மீதும் அவர்கள் கண்கள் பட்டது.
ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 496 அளவில்), முதலாம் போப் ஜெலாசியஸ் பாகன் மதத்தின் லுபர்காலியாவை, பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் ஒருநாள் திருவிழாவாக 'புனித வாலன்டைன் தினமாக' அதிகாரப்பூர்வமாக மாற்றினார். இதில் புனித வாலன்டைன் (Saint Valentine) என்பவர் கி.பி 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியாராகவோ, பிஷப்பாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரைப் பற்றிய பல புராணக் கதைகள் இருக்கின்றன. அதில் ஒரு கதையின்படி, புனித வாலண்டைன் ரோமில் ஒரு பாதிரியாராக இருந்திருக்கிறார். அப்போது பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் தனது படையில் இருக்கும் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள தடை விதித்திருக்கிறார். ஏனெனில் திருமணம் செய்து கொள்ளாத முரட்டு சிங்கிள்கள் தான் போரில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்பது அவரது நம்பிக்கையாக இருந்திருக்கிறது. இந்த நேரத்தில் தான் 'உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு இவன் நன்மை நன்மை செய்யப் பிறந்தவன். இரு உள்ளங்களை உள்ளங்களைச் சேர்த்தது வைக்க இவன் உயிரையும் கொடுப்பவன்' என வாலண்டைன் இந்த தடையை மீறி, ரகசியமாக அந்த இளைஞர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். இதனால், அவர் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார் என்கிறது ஒரு கதை.

மற்றொரு கதையில் வாலன்டைன் சிறையிலிருந்த போது, 'ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்' என்று தனது காதலிக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பியிருக்கிறார். இந்த கடிதங்களில் அவர் தனது அன்பை வெளிப்படுத்தி, "உன்னுடைய வாலன்டைனிடமிருந்து" (From your Valentine) என்று முடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆதலால் தான் இன்றும் வாலன்டைன் தினத்தின் ஒரு பிரபலமான சொற்றொடராக இது இருப்பதாகக் கருதப்படுகிறது. அடுத்து, கண்பார்வையை இழந்த இளைஞனுக்குப் பார்வையை வர வைத்து தனது காதலியை மீண்டும் காண உதவினார் என்ற மற்றொரு கதையும் உண்டு. மற்றொரு கதையின்படி, வாலன்டைன் சிறையிலிருந்தபோது, காவலரின் பார்வைசவாலுடைய மகளுக்குக் காதல் கடிதம் எழுதி, அவளது பார்வையை மீட்டெடுத்தார் என்று கூறப்படுகிறது. இப்படிப் புனிதராக வாலன்டைன் என்கிற தனிநபரின் அன்பின் வெளிப்பாட்டை மதிக்கும் ஒரு நாளாக அனுசரிக்கப்பட்டது. அதேபோல கிறிஸ்துவ மதத்தைப் பரப்பிய வாலன்டைன் இறந்த தினமும் பிப்ரவரி 14 என்று மற்றொரு கதையும் உலவுகிறது.
14-ம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல புனித வாலன்டைன் தினம் காதல் மற்றும் ரொமான்ஸ் கொண்டாட்டமாக உருமாறத் தொடங்கியது. அதில் காதல் என்றாலே நம் நினைவுக்கு வரும் வார்த்தையான 'கவிதை' முக்கிய பங்கு வகித்தது என்று சொல்லலாம். 1382 ஆம் ஆண்டு ஜெப்ரி சாசர் எழுதிய 'பார்லிமென்ட் ஆஃப் பவுல்ஸ்' கவிதையில் 'ஏனெனில் புனித வாலன்டைன் நாளன்று... ஒவ்வொரு பறவையும் அங்கு வந்து தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்...' என்ற காதல் கவிதை வாலன்டைனை மிகவும் பிரபலப்படுத்தியது. இதனால் வீரர்களும் பிரபுக்களும் கவிதைகள், பாடல்கள், பரிசுப் பொருட்கள் கொண்டு அரண்மையைச் சுற்றி காதலை மலரவிட்டனர்.

இப்படியே 15,16-ம் நூற்றாண்டுகளில், இலக்கியத்தின் மூலம் வாலன்டைன் தினம் ஐரோப்பாவில் தன் சிறகை விரித்துப் பறக்கத் தொடங்கின. வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளில் வாலன்டைன் தினத்தை மேலும் ரொமான்டிக்காக கொண்டு சேர்த்தார். மேலும், 15ம் நூற்றாண்டில், புனித வாலன்டைன் தினத்தன்று காதல் கடிதங்கள் அனுப்பும் பழக்கம் பிரபலமானது. இந்த கடிதங்கள் 'வாலன்டைன்ஸ்' என்று அழைக்கப்பட்டன. இந்த கடிதங்கள் பெரும்பாலும் கையால் எழுதப்பட்டு, இதயம் மற்றும் காதல் குறியீடுகளுடன் அலங்கரிக்கப்பட்டன. காதலர்கள் ஒருவருக்கொருவர் பூக்கள், இனிப்புகள் மற்றும் சிறிய பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் தொடங்கியது.
18, 19-ம் நூற்றாண்டுகளின் தொழிற்புரட்சி, வாலன்டைன் தினத்தை ஒரு வணிக விழாவாக மாற்றியது. இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட வாலன்டைன் தின கிரீட்டிங் கார்டுகள் பிரபலமாயின. இந்த கார்டுகள் பெரும்பாலும் லேஸ், ரிப்பன்கள், காதல் கவிதைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில், "அமெரிக்க வாலன்டைனின் தாய்" என அழைக்கப்படும் எஸ்தர் ஏ. ஹவுலாந்த் 1840களில் விரிவான, கைவினை வாலன்டைன் கார்டுகளை உருவாக்கத் தொடங்கினார். அவரது படைப்புகள் கிரீட்டிங் கார்டு கொடுக்கும் பாரம்பரியத்தைப் பிரபலப்படுத்த உதவின. மலிவான தபால் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் வாலன்டைன் வாழ்த்துக்களை அனுப்புவதை எளிதாக்கியது. ரோமாபுரியில் தொடங்கிய இந்த கலாச்சாரம், இப்போது ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன.

ஜப்பான் நாட்டில் பெண்கள் பிப்ரவரி 14 அன்று ஆண்களுக்கு சாக்லேட் கொடுப்பார்கள், ஆண்கள் சரியாக ஒரு மாதம் கழித்து வெள்ளை தினம் (மார்ச் 14) அன்று அதற்குப் பதிலளிப்பார்கள். தென் கொரியாவில் ஒவ்வொரு மாதமும் 14ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மே மாதம் 14-ம் நாள் ரோஜா தினம் என்றும் , ஜூன் மாதம் 'கிஸ் தினம்' என்றும் கொண்டாடப்படுகிறது. அதேபோல ஏப்ரல் 14 அன்று 'பிளாக் டே' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர் இல்லாதவர்கள் கறுப்பு நூடுல்ஸ் சாப்பிட்டு துக்கம் கொண்டாடுவார்களாம்.
பிலிப்பைன்ஸில் காதலர் தினத்தன்று பெரிய அளவில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. டென்மார்க்கில் காதலர்கள் ஒருவருக்கொருவர் 'ஸ்னோட்ராப்ஸ்' (Snowdrops) என்ற வெள்ளை பூக்களையும், காகிதத்தில் வெட்டிய வடிவங்களைக் கொண்ட 'Gaekkebrev' கடிதங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவில் இந்த நாள் காதலை விட நட்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இப்படி லூபர்காலியாவில் தொடங்கி புனித வாலன்டைனின் புராணக் கதைகளில் பரிணாமம் அடைந்து, சாசரின் கவிதை முதல் இன்றைய வெகுஜன கிரீட்டிங் அட்டைகள் வரை, வாலன்டைன் தினம் அனைத்து வடிவங்களிலும் அன்பின் உலகளாவிய கொண்டாட்டமாகப் பரிணமித்துள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play