Vetrimaaran: "20 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் அதே சூழலில்தான் இருந்தேன்" - வெற்றி மாறன் ஓப்பன் டாக்
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 'விடுதலை 2' திரைப்படம் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தற்போது 'வாடிவாசல்' படத்தின் முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் 'தி இந்து' ஊடகம் நடத்திய 'ஹடில்' நிகழ்வில் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.
'விடுதலை' திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலிருந்தும் தான் கற்றுக் கொண்ட பாடங்களை அங்குப் பகிர்ந்திருக்கிறார்.
அவர் பேசுகையில், "இந்தத் திட்டத்திலிருந்து நான் கற்ற மிகப்பெரிய பாடம், ஒரு இயக்குநராக உங்கள் திரைப்படத்தை உருவாக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை வேறு யாரையும் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது என்பதுதான். நான் என் நேரத்தை எடுத்திருக்க வேண்டும்.
இந்தத் திரைப்படத்தில் மேலும் 3-4 மாதங்கள் வேலை செய்ய விரும்பினேன்" என்றார்.

இதனைத் தொடர்ந்து 'வாடிவாசல்' படத்திற்கு நிலவும் எதிர்பார்ப்புகள் தொடர்பாகப் பேசுகையில், "எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கும் முழு முயற்சியிலும் நான் சிக்க விரும்பவில்லை. நான் எனது நூறு சதவீத உழைப்பை என் பணியில் செலுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
எனது படங்களால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல" என்றார்.
திரைத்துறையில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்தும் வெற்றி மாறன் பேசினார்.
அவர், "சமீபத்தில், ஒரு இளம் பெண் எனது அலுவலகத்திற்கு வந்து, உதவி இயக்குநராகச் சேர வாய்ப்பு கேட்டார்.
அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர், ஆனால் சென்னையில் தனது நண்பர்களுடன் வசிப்பதாகக் கூறினார்.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, நானும் இதே போன்ற சூழலில் இருந்தேன். தற்போது, பல இளம் பெண்கள் தனித்துவமான யோசனைகளுடன் முன்னேறி வருவதைப் பார்க்கிறேன்," என்றார்.

மேலும் பேசிய அவர், "நான் வன்முறையைக் காட்டிலும் காதல் படங்களை அதிகமாகத் தேர்ந்தெடுப்பேன்.
நான் காதல் கதைகளைப் படமாக உருவாக்கலாம் என முடிவெடுத்தாலும் உங்களுடைய எதிர்பார்ப்பு வேறொரு விதமாக இருக்கிறது" என்றவர், அவருக்குப் பிடித்த சமீபத்திய இளம் இயக்குநர்கள் தொடர்பாகப் பேசினார்.
அவர், "நிறையப் பேர் இருக்கிறார்கள். சிலர் இன்னும் நல்ல படங்களை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அந்த லிஸ்டில் வினோத்ராஜ் மற்றும் வர்ஷா ('பேட் கேர்ள்' இயக்குநர்) இருக்கிறார்கள்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...