செய்திகள் :

VIT Chennai: முன்னாள் மாணவர்களின் சந்திப்பு; சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கமல்ஹாசன்

post image

விஐடி சென்னையின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி விஐடி சென்னை வளாகத்தில் 15.8.2025 அன்று நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர். தங்களின் கல்லூரி நாட்கள் நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர். 

இதற்கிடையே, முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

விழாவில், கமல்ஹாசன் பேசுகையில், “சுதந்திரம் என்பது ஆகஸ்ட் 15-ல் ஆண்டுக்கு ஒருமுறை நாம் வணங்கும் ஒரு நினைவுச்சின்னம் அல்ல. அது ஒரு உயிருள்ள விஷயம், அது வளர வேண்டும்.

 விஐடி
விஐடி

 1947-ல் நமது தலைவர்கள் நமக்கு கனவு காணும் உரிமையைக் கொடுத்தார்கள். நாம் சுதந்திரம், பேச்சுரிமை, மத சுதந்திரம் மற்றும் தேர்ந்தெடுக்கும் உரிமை பற்றி அடிக்கடி பேசுகிறோம். 

ஆனால், நாம் அரிதாகப் பேசும் ஒரு சுதந்திரம் இருக்கிறது, அது இல்லாமல் எந்த ஒரு புதுமையும் சாத்தியமில்லை. அதுதான், தோல்வியடைவதற்கான சுதந்திரம்.

ஏனென்றால், தோல்விக்கு அஞ்சும் ஒரு நாடு, அதன் உண்மையான திறனை ஒருபோதும் கண்டறியாது. இந்தியாவில் தோல்வி என்பது ஒரு ஆயுள் தண்டனை போல பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் நான் தோல்வியடைந்திருக்கிறேன். பொதுவெளியில், வேதனையுடன், தனிப்பட்ட முறையில், பலமுறை. பொதுவெளியில், சில முறை. நான் தோல்வியடைந்த படங்களில் நடித்திருக்கிறேன். 

நீங்கள் வியக்கும் ஒவ்வொரு வெற்றிக் கதையும், நீங்கள் ஒருபோதும் பார்க்காத தோல்விகளின் நீண்ட தொகுப்புதான். உங்கள் வாழ்க்கையிலும் அந்தத் தோல்விகளை நீங்கள் தவிர்த்துவிட்டு முன்னேற வேண்டும். நான் இங்கே நிற்பது அந்தத் தோல்விகளால் தான்.

எடிசனிடம் கேளுங்கள். ஒரு செயலை எப்படி செய்யக்கூடாது என்பதற்கு அவரிடம் ஆயிரத்து நூறு வழிகள் தெரியும். அதன் பிறகுதான், அவர் விளக்கை ஏற்றினார், 2025-ல், தோல்வியின் பயமின்றி நிற்பதற்கான தைரியத்திற்காக நாம் போராட வேண்டும். ஏனென்றால், தோல்வியை எதிர்கொள்ள முடிந்தால், வெற்றி தவிர்க்க முடியாததாகிவிடும். நீங்கள் தோல்வியடைய அஞ்சினால், வெற்றி பெறுவதற்குத் தகுதியான எதையும் நீங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டீர்கள்.

எந்த மொழியிலும் மிகத் துணிச்சலான வாக்கியம், "நான் மீண்டும் முயற்சிப்பேன்" என்பதுதான். 1947-ல், இந்தியா கனவு காண சுதந்திரம் பெற்றது. 2025-ல், பயமின்றி தோல்வியடையவும் நாம் சுதந்திரம் பெறுவோம். உண்மையான சுதந்திரம் என்பது, ஒருவரின் வாழ்க்கை அவரின் மோசமான நாளாலோ அல்லது மோசமான முடிவாலோ வரையறுக்கப்படாததுதான். 

பெரியாரைப் பத்தி சொல்லும்போது, அவர் போட்டோ எடுப்பதற்கு எங்க அம்மாவிடம், பெரியாரோட போட்டோ எடுக்கணும்னு காசு கேட்டா கொடுக்க மாட்டாங்க. அதனால அது வேற சினிமாவுக்குப் போறேன்னு சொல்லிட்டு, அதை வாங்கிட்டு 5 ரூபாயோ 10 ரூபாயோ எனக்கு தெரியல. அது தெரியும். 

போட்டோ எடுத்தா காசு கேட்பார். அப்ப என் நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க, ஏன் மூணு தலைமுறைக்கு சொத்து வெச்சுக்கிட்டு, சின்னப் பையன்கிட்ட 5 ரூபாய் வாங்குறாரு, இவர் எப்படியா பெரியார் ஆவாரு? அவர் சேர்த்த சொத்தெல்லாம் எங்க இருக்கு பாருங்க. 

மூணு தலைமுறைக்கு இல்ல, ஏழு தலைமுறைக்கு யூஸ் ஆயிட்டு இருக்கு. அவரிடத்தில இல்ல. எப்படி ஃபெயிலியர் (failure) கேவலம் இல்லன்னு சொன்னேனோ, அந்த மாதிரி சிக்கனமும் ஒண்ணும் கெடுதல் இல்லைங்க.“ என்றார்.

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன் அளித்த பதில்கள் வருமாறு: 

தேசிய அளவிலான விவாதத்தில் உங்கள் குரல் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, “ தேசியக் குரல் என்பது ஒருமையாக இருக்கக்கூடாது. அது பன்மைத்தன்மை கொண்டதாக, ஒரு கோரசாக (chorus) இருக்க வேண்டும். அதுதான் எனது முதல் குரலாக இருக்கும்” என்றார்.

நீங்கள் தோல்விகளையோ, பின்னடைவுகளையோ சந்திக்கும்போது, மீண்டும் எழுந்து நிற்க தைரியத்தை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று கேள்விக்கு,  முகமது அலி-யைப் பார்க்கும்போது வரும்... ஏன் கலைஞரைப் பார்க்கும்போது வரும். 13 வருஷம் அவர் தோல்வியில்தானே இருந்தார்? அது தோல்வி கிடையாது. "It’s practice to rise again and stay forever in our minds." (மீண்டும் எழுந்து நம் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பதற்கான பயிற்சி அது).” என்றார்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “ நான் பெரியாரின் கொள்கைகளிலும், சுயமரியாதை இயக்கத்திலும் வலுவான நம்பிக்கை கொண்டவன். "என்னை விட கமல்ஹாசன் தீவிரமாய் இருக்கிறார். நான் அண்ணா மாதிரி, அவர் பெரியார் மாதிரி." ஏனெனில், அவர் சமூக சீர்திருத்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். மேலும், அவர் கடந்த 65 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். அவர் தனது கருத்துக்களைப் பரப்பும் விதம் மிகவும் வித்தியாசமானது. இப்போது நாம் இதை இந்திய நாடாளுமன்றத்தில் காணப்போகிறோம். 

இதுவரை, அவர் முக்கியமாக தென்னிந்தியாவிலும், தமிழ்நாட்டிலும்தான் பேசி வந்திருக்கிறார். எனவே, அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், 

கல்வி, குறிப்பாக உயர்கல்வி மட்டுமே இந்த நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா 2047-க்குள் ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று நம் பிரதமர் மற்றும் முதல்வர் சொல்வது போலவே, நாம் அனைவரும் விரும்புகிறோம். இது உயர்கல்வியின் உதவியுடன் மட்டுமே சாத்தியம். நமது மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் சீனாவைத் தாண்டிவிட்டோம். 

அதே நேரத்தில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அதிக மக்களைக் கொண்ட நாடாகவும் நாம் இருக்கிறோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். மக்களின் தனிநபர் வருமானத்தை மேம்படுத்துவதில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. 

நமது நாட்டில் அதிக ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. நிச்சயமாக, மதங்கள், சாதிகள் போன்றவற்றில் சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

இந்தியாவில் 25,000 சாதிகள் உள்ளன. இப்போது அனைத்துக் கட்சிகளும் அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. 

1931-ல் பிரிட்டிஷாரால் நிறுத்தப்பட்டது, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இது முன்னோக்கிய அடியா அல்லது பின்னோக்கிய அடியா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகள் 'சாதியற்ற சமுதாயம்' என்பதை வலியுறுத்துகின்றன. இதை நாம் எப்படி அடையப் போகிறோம் என்று தெரியவில்லை. சமூகத்தில் ஏற்கெனவே உயர்சாதி, தாழ்ந்த சாதி, நடுத்தர வர்க்கம் என ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

ஆனால் இப்போது பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. நாட்டில் அதிக பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. மொத்த மக்கள் தொகையில், 120 கோடி பேர் குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 

வெறும் 20 லட்சம் பேர் மட்டுமே உயர் வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தில், கீழ் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தில் உள்ளனர். 

ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் சுமார் 9 லட்சம் பேர் உள்ளனர். ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் சம்பாதிக்கும் சுமார் 10,000 பேர் நாட்டில் உள்ளனர். மேலும் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் சம்பாதிக்கும் 9,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதுதான் உயர் வர்க்கம். 

உலகில் சுமார் 3,000 பில்லியனர்கள் உள்ளனர், அதில் நமது பங்கு கிட்டத்தட்ட 10%. முதலில் அமெரிக்கா, இரண்டாவதாக சீனா, மூன்றாவதாக இந்தியா. எனவே நம்மிடம் பல பில்லியனர்கள் உள்ளனர். அவர்கள் 3 லட்சம், 4 லட்சம் கோடி முதல் 8 லட்சம் கோடி வரை சொத்து வைத்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் கணக்குப்படியே, 13 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். இதுதான் இந்த நாட்டில் நடக்கிறது.

ஜப்பானின் தனிநபர் வருமானம் இந்தியாவை விட 12 மடங்கு அதிகம். வளர்ச்சியின் பலன் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்,

28 அல்லது 29% GER (மொத்த மாணவர் சேர்க்கை விகிதம்) வைத்துக்கொண்டு நாம் ஒரு வளர்ந்த நாடாக மாற முடியாது. நாம் முன்னேறிய நாடுகளுடன் போட்டியிட வேண்டும்,

கல்வியும் சுகாதாரமும் தான் எந்தவொரு அரசும் கவனித்துக் கொள்ள வேண்டிய இரண்டு துறைகள். ஆனால் இப்போது நாம் அதிகம் செலவழிப்பதில்லை. கடந்த 30-40 ஆண்டுகளாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக உள்ளது. ஆனால் நாம் 3 சதவீதத்தை கூடத் தாண்டவில்லை.

இந்த ஆண்டு தமிழக அரசு தன் பட்ஜெட்டில் 21 சதவீதம் கல்விக்கு ஒதுக்கியுள்ளது. 21% ஒதுக்கியதற்காக தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் நான் பாராட்டுகிறேன், ஆனால் மத்திய அரசு 2.5% மட்டுமே ஒதுக்கியுள்ளது.

நாட்டின் 80 சதவீதம் செல்வத்தை வைத்திருக்கும் முதல் 10 சதவீதம் மக்கள், வெறும் 3 சதவீதம் ஜிஎஸ்டி மட்டுமே செலுத்துகிறார்கள். நாட்டின் 4 சதவீதம் செல்வத்தை மட்டுமே கட்டுப்படுத்தும் கடைசி 50 சதவீதம் மக்கள், 66 சதவீதம் செலுத்துகின்றனர். இதுதான் ஜிஎஸ்டி.

அனைத்து கல்வி நிறுவனங்கள் மீதும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டியை அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு நீக்க வேண்டும், அப்போதுதான் கல்விக் கட்டணத்தைக் குறைக்க முடியும். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும்” என்றார். 

விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில்,”  திரைத்துறையில் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான், சிறுவயதில் அவரது சிகை அலங்காரம் முதல் காலணிகள் வரை அனைத்தையும் பின்பற்றியுள்ளேன்.

1988-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் நான் மரம் நடும் பழக்கத்தையே தொடங்கினேன். இன்று விஐடி வளாகம் பசுமைக்கு பெயர் பெற்றிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அன்று அந்தப் படம் தந்த உத்வேகம்தான். 

அந்தப் பெருமை முழுவதும் நமது உலக நாயகனையே சாரும்" வகுப்பறைகள் உங்களுக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன, ஆனால் இந்த வளாகம் உங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துள்ளது. நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள், அங்கு கற்றுக்கொள்ளுங்கள், சம்பாதியுங்கள்.

ஆனால், தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து சேவை செய்யுங்கள். Learn, Earn, Return என்பதே எனது வேண்டுகோள். வேலை தேடுபவராக இல்லாமல், பலருக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக நீங்கள் உருவாக வேண்டும்," என்றார். 

விழாவில், விஐடி சென்னையில் படித்து முன்னணி நிறுவனங்களில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கு கமல்ஹாசன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில், விஐடி இணை துணை வேந்தர் முனைவர் டி.தியாகராஜன், விஐடி சென்னையின் கூடுதல் பதிவாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Coolie: `ட்ரோல் செய்பவர்களுக்கும் மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றி!' - 'கூலி' நடிகை ரச்சிதா ராம் பதிவு!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த 'கூலி' திரைப்படம் கடந்த 14-ம் தேதி வெளியாகியிருந்தது. லோகேஷ் கனகராஜ் எப்போதுமே தன்னுடைய திரைப்படங்களில் பெரிதளவில் தமிழ் ஆடியன்ஸுக்கு ப... மேலும் பார்க்க

Rajini:``நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்" - ரஜினியை சந்தித்த நயினார் நாகேந்திரன்!

திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்துக்கு முக்கிய இடமுண்டு. நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அதற்காக தமிழ், மலையாளம், தெலுங்கு முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை ... மேலும் பார்க்க

Dhanush: 'இட்லி கடை' 2nd சிங்கிள்; D54 படப்பிடிப்பு அப்டேட், தயாராகும் D55 இயக்குநர்

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' அக்டோபர் முதல் தேதியன்று திரைக்கு வருவதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் பரபரக்கிறது. இன்னொரு பக்கம் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் மும்முரமாக நடித்து வ... மேலும் பார்க்க

`உண்மையில் இது எனது முதல் 'Fan Boy' மொமன்ட்' - ஏ.ஆர் ரஹ்மான் குறித்து நெகிழ்ந்த சுஷின் ஷ்யாம்

மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'கிஷ்மத்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஷின் ஷ்யாம். இதனைத் தொடர்ந்து ‘கும்பளாங்கி நைட்ஸ்’,'ட்ரான்ஸ்’, ‘மாலிக்’, ‘மின்னல் முரளி’, ‘பீஷ்ம பருவம்’, ‘ரோமான்சம்’, ‘கண்ண... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியை சந்தித்து சினிமா வாய்ப்பு கேட்ட இளைஞர்கள்; என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி, இரண்டு யூடியூபர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் விஜய் சேதுபதி, தனது நடிப்பு திற... மேலும் பார்க்க

Coolie: `கூலி' கோலிவுட்டில் வரவேற்பை அள்ளும் ரச்சிதா ராம்!| Photo Album

Coolie - War 2: ரஜினி - ஹ்ரித்திக் இணைந்து நடித்த காட்சி; அனுபவம் பகிர்ந்த பாலிவுட் நடிகர்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்... மேலும் பார்க்க