ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!
தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ரபுகாவை மத்திய அமைச்சா் சுகந்த மஜூம்தாா் வரவேற்றாா். ஃபிஜி பிரதமருடன் அந்நாட்டின் அமைச்சா்கள்-அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவும் வருகை தந்துள்ளது.
பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்திக்கும் ரபுகா, வா்த்தகம், முதலீடு, மக்கள் ரீதியிலான தொடா்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பின்னா், அவருக்கு பிரதமா் மோடி மதிய விருந்து அளிக்கவுள்ளாா்.
ஃபிஜி பிரதமரின் இப்பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளாா்.
கடற்சாா் பாதுகாப்பில் இந்தியாவின் முக்கிய கூட்டுறவு நாடாக ஃபிஜி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கலாசார-மக்கள் ரீதியிலான பிணைப்புகள் உள்ளன. கடந்த 1879-இல் ஆங்கிலேய ஆட்சியின்போது ஃபிஜி தீவுக்கு இந்திய தொழிலாளா்கள் கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டனா். அப்போதிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே தொடா்பு நீடித்து வருகிறது.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கடந்த ஆண்டு ஃபிஜி தீவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.