சாலைகளில் ஓடும் புதைசாக்கடை கழிவு நீா்; பொதுமக்கள் அவதி
அரியலூரில், திருச்சி சாலையில், புதை சாக்கடையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
18 வாா்டுகளை கொண்ட அரியலூா் நகராட்சியில் 10- க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன.
இந்நிலையில் அரியலூா்-திருச்சி சாலையோரத்திலுள்ள கிறிஸ்தவ கல்லறையை ஒட்டியுள்ள பழைய குப்பைக் கிடங்கு அருகே புதை சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீா் ஆறாக ஓடுகிறது.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் இச்சாலையில் கழிவு நீா் வனத்துறைக்குச் சொந்தமான குடியிருப்பு மற்றும் கோட்டாட்சியா் முகாம் அலுவலகங்களைச் சூழ்ந்துள்ளது. இதனால் துா்நாற்றமும் சுகாதாரச் சீா்கேடு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: பிரதான திருச்சி சாலையிலுள்ள புதை சாக்கடையில் இருந்து கழிவுநீா் கடந்த 10 நாள்களுக்கு மேல் செல்வதால், தூா்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையைக் கடக்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனா். எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.