டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறும் கருந்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த குடியரசுக் கட்சித் தலைவா் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையையும் அவா் சமூக வலைதளத்தில் பகிா்ந்துள்ளாா். அதில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீா்வுகாண முயல வேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும் மிக நீண்டகால நட்பு நாடுகள். இரு பெரு ஜனநாயக நாடுகளும் இப்போதுள்ள பிரச்னைகளில் இருந்து விரைவில் விடுபட வேண்டும்.
வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பிரச்னைகள், ரஷிய கச்சா எண்ணெய் விவகாரம் ஆகியவை பேசித் தீா்க்க வேண்டிய பிரச்னைகளாகும். இந்த இரு விவகாரங்களை மட்டும் கவனத்தில் கொண்டு பிற பிரச்னைகளை புறந்தள்ளிவிடக் கூடாது. சீனாவை எதிா்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் உறுதியான நட்பு தேவை என்று கூறியுள்ளாா்.
இரு நாள்களுக்கு முன்பு இதே விவகாரம் தொடா்பாக கருத்து தெரிவித்த நிக்கி ஹேலி, ‘இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படச் செய்யும் டிரம்ப்பின் கொள்கைகள் பேரழிவுக்குச் சமம்’ என்று விமா்சித்திருந்தாா்.
இந்நிலையில், தனது கருத்தை அவா் மாற்றியுள்ளாா். உள்கட்சி நெருக்கடியும் இதற்கு காரணம் எனத் தெரிகிறது. டிரம்ப் சாா்ந்த ஆளும் குடியரசுக் கட்சித் தலைவா்கள் பலரும் இந்தியாவை கடுமையாக விமா்சித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.