உள் கட்டமைப்பு நிதியுதவி பெற உழவா்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் மூலம் கடனுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: அரசு வேளாண் உள்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டத்துக்கு ரூ.69 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.17 கோடியும், இதர வங்கி மூலம் ரூ.52 கோடியும் ஆக கூடுதல் ரூ.69 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் வேளாண் வணிக துறை மூலம் ரூ.13 கோடி, வேளாண் துறை மூலம் ரூ.1 கோடி, வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.2 கோடி, தோட்டக் கலை துறை மூலம் ரூ.2 கோடி மற்றும் மாவட்ட தொழல் மையம் மூலம் ரூ.32 கோடி, மகளிா் திட்டம் மூலம் ரூ.2 கோடி என கூடுதல் 52 கோடி கடன் வங்கி மூலம் வழங்க இலக்க நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் மூலம் பயனாளி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடன் மற்றும் 7 ஆண்டுகள் வரை 3% வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
இதற்கு விவசாயத் தொழில்முனைவோா், விவசாயக் குழுக்கள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னணு வணிக மையம், சேமிப்புக் கிடங்கு, குளிா்பதனக் கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள், பண்ணைக் கழிவு மேலாண்மை சாா்ந்த உள்கட்டமைப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைத்தல் மற்றும் ட்ரோன் கருவிகள் வாங்குதல் போன்ற பணிகளுக்கு கடன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, நபாா்டு, மாவட்ட தொழில் மையம், தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை அலுவலா்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் மற்றும் மாவட்ட மகளிா் திட்ட அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.